பூமியின் புன்னகையை பழிவாங்கும் விரோதியாய் ஆக்கப்பட்டேன் - அடுத்து என்ன?


“நான் சமாதானத்தை நாடுகிறேன்,அவர்களோ நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.” என்றொரு வாக்கியம் பைபிளில் இருக்கிறது.தமிழீழர்கள் விரும்பிய சமாதானத்தையும்                அமைதியையும் இவ்வையகம் இனப்படுகொலை நடத்தி              கொன்றொழித்துக் கொண்டிருந்த காலங்களில்  இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் எங்கும்  ஒலித்துக்கொண்டிருந்தது.
அதுவே என்னுடைய  இலக்கியத்தின் விளைநிலம்.                   

                   

போர்க்களத்தில் உயிர்பிழைத்த  நிகழ்வுகளை கலையாக்குகையில் ஏற்படுகிற  உளச்சிதைவை ஏற்றுக்கொண்டேன்.                                                        என்  எழுத்துவத்தின் நீண்ட நடமாட்டத்தில் என்றைக்கோ எனதுள்ளம்  முழுமையும் சிதைந்துவிடுமோவென்று  அஞ்சத்தோன்றுகிறது.யுத்த நாட்களில் வாழ்வது மட்டுமல்ல, அதனை எழுதுவதும் கொடூரமானதாகவேயிருக்கிறது. எனது இனத்தின் அவலக்குரலை            கேட்கும் ஒரேயொரு  செவியைக் கூட இவ்வுலகம் இன்னும்                         கொண்டிருக்கவில்லை.


கவிதைகளை எழுதுகையில் மனம்படுகிற வாதையை                              களத்தில் வீரச்சாவு அடைந்த என் அண்ணாவின் எலும்புகளைக்              கொண்டு தடவுகிறேன்.என்னுடைய பால்யத்தின்                   நினைவுகூறுதல்களில் கொண்டாட்டமென்பது பல்லிடுக்கில்             மாட்டிக்கொண்ட மாமிசத்தும்பளவிலேனும் காணுவது அரிதே.  

”டாங்கிகளில் சரியும் முல்லை நிலா” கவிதைத்தொகுப்பை எழுதிமுடிக்கையில் உடலின் ரத்தஅழுத்தம் அதிகரித்தது.                                நான் எதிர்கொண்ட உடல்ரீதியான வதைகளின் ஒவ்வோர்            இழைகளையும் இவ்வுலகின் கண்களுக்கு முன் அவிழ்த்துக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துயர் என்னுடைய  கதைகளுக்கு இருக்கிறது.                                          அநீதி நிகழ்கையில் அமைதியாய் இருந்தவர்களும் அநீதியாளர்களே.அவர்களையும்  என் இலக்கியம்                                    கலங்கடிக்கும்.

மூன்று தசாப்தகாலமாக நிகழ்ந்த தமிழீழர்களின்  ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம் கண்டிருக்கிற வீழ்ச்சியையடுத்து கட்டமைக்கப்படும் அனைத்து  பொய்க்கதைகளையும் தகர்க்கவல்ல பேருண்மையை என்னுடைய கதைமாந்தர்கள் சுமக்கிறார்கள்.                  அதற்காய் நான் எதிர்கொள்ளும் அவதூறுகளும்,வசைகளும்                   கணக்கில்லாதவை.என் சிறுகதைகளில் வெளிப்படும்                        உண்மைகளையும் போர்க்காலங்களின் ரத்தமும்  சதையுமான நிமிடங்களையும் கற்பனை   செய்து பாருங்கள். 

இவை எல்லாவற்றையும் புலிஆதரவு  இலக்கியமென்று ஒருபக்கத்தின் சார்பில் நிறுத்திவிடும் போக்குத்தான் மனத்துயரைத் தருவிக்கிறது.                  பேருண்மைக்கு இப்போது புலிஆதரவு என்றொரு  பெயருண்டு என்கிற தரிசனத்தை எனது இலக்கியத்தின் வாயிலாகவும் நீங்கள் பெறமுடியும். கொடூரம், மனிதப்படுகொலை மட்டுமல்ல, அதனை  மனிதப்படுகொலை        என ஏற்கமறுப்பதும் தான்.



தமிழ்த்துவ இலக்கியத்தின் மேன்மைக்கு இன்றைய தமிழீழ              இலக்கியம் புதிய தன்மைகளை வழங்கியிருக்கிறது.போரின்  செக்கச்சிவப்பான மூச்சையும் அதனுடைய ஜீரணிக்கமுடியாத, பொறுத்துக்கொள்ளமுடியாத குரூரத்தையும் தமிழின் நவீன            இலக்கியத்தில் சேர்க்கும் வல்லமையை எங்களுடைய(தமிழீழ படைப்புக்களே) பிரதிகளே செய்கின்றன.

கவிதைகள், சிறுகதைகள் என்கிற கலைவடிவங்களில்  மட்டுமல்லாது குறுநாவல்களையும் எழுதத்தொடங்கியிருக்கிறேன். மிகவிரைவில் நூல்வனம் பதிப்பகம் மூலம் “உலகின் மிக நீண்ட கழிவறை”  குறுநாவல் தொகுப்பு வெளிவரவிருக்கிறது.நான் பூமியின் புன்னகையை பழிவாங்கும் விரோதியாய் ஆக்கப்பட்டு விட்டேன். பூமி துயரத்தை மட்டுமே எனக்கு அன்பளித்த விளைவே அது.

ஒரு மனிதன் துன்பப்படுவதை விரும்பாத விதியை கனவில் கூடக்             காணமுடிவதில்லை.அப்படித்தான் இருக்கிறது எழுத்தெனும் கொடுங்கனவு.அறத்தையே நம்பி நம்பி ஆழக்கடலில் ஆயுதங்களால் கொன்றொழிக்கப்பட்டு வீசப்பட்ட பிணச் சமுத்திரத்தில் நிர்வாணமாய் நின்றபடியே “அறம் வெல்லும் அஞ்சற்க” என்று சொன்னேன்.

வாழ்வென்பது அழுகையால் கட்டியெழுப்பப்பட்ட துர்தரிசனம்.  பதுங்குகுழியைத் என்னுடைய கருவறை என்று நினைக்கிறேன்.                   இடப்பெயர்வை,அதிகாரக்கொலைகளை,விடுதலை அமைப்பின் அத்துமீறல்களை,தியாகத்தை,குருதியை,ஆட்சேர்ப்பை,                   களவெற்றியை, போராளியை,துரோகியை,முள்ளிவாய்க்காலை, சரணடைதலை,வெள்ளைக்கொடியை, பாலச்சந்திரனை,               இசைப்பிரியாவை புலம்பெயர்வை என்று  நான் எழுதவதற்கு மட்டுமே            இந்த நூற்றாண்டு போதாது.

அவ்வளவு திரளான பாவத்தை இவ்வுலகம் எனக்குச் செய்திருக்கிறதென்பதை நீங்கள் அறிவீர்கள் தானே!

மார்ச் 2018
தடம் இதழ் 

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி