போர்க்களப்படைப்பு -அகரமுதல்வனின் சிறுகதைகளை முன்வைத்து.

தமிழின் தொடக்ககாலச் சிறுகதைகள் வடிவ அமைதி நோக்கியும், உள்ளடக்கத்தேவை நோக்கியும் பயணித்தன. புதுமைப்பித்தனும், கு.அழகிரிசாமியும், மௌனியும், ஜெயகாந்தனும் சிறுகதைப் படைபாளிகளுக்கான முன்மாதிகளாக உருவெடுத்தனர்.  நூற்றுக்கணக்கான சிறுகதைப் படைப்பாளர்கள் தமிழில் வேர்கொண்டு நிலைத்து நிற்கின்றனர். அவரவருக்கான களங்கள் தமிழ்நிலத்தில் புதிய பாய்ச்சலை, தளங்களை விரிவுபடுத்தின.

அவ்வகையில் புலம்பெயர் மற்றும் போர்க்களப் படைப்பாளிகள் தமிழர்தம் துயரங்களின் இரத்த சாட்சியங்களை உலகு தழுவிய பொதுமைநிலையில் படைத்துவருகின்றனர். அவர்களுள் ஒருவரான அகரமுதல்வன், படைப்பிலக்கியத்துறையில் வீறுகொண்டெழுகிற இளையதலைமுறை எழுத்தாளராவார்.

ஈழப்போரின் வடுக்களை, துயரங்களை, வதைகளை எடுத்தியம்புகிற அகரமுதல்வனின் ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ என்னும் சிறுகதைத் தொகுதியின் முதல் ஐந்து கதைகள் மட்டுமே ஆய்வுப் பொருளாக அமைகின்றன.




போர்க்களமும் வதைபடும் வாழ்வும் 

ஈழத்தமிழர்களை அழித்தொழித்து சிங்களப் பேரினவாதத்தை நிலைநிறுத்துவதற்கு பலமுனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதிவழி, ஆயுதவழி என பலகட்டப் போராட்டங்கள் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டன. அமைதிவழிப் போராட்டங்கள் பயனற்றுப் போன நிலையில் விடுதலைப்புலிகளின் கொரில்லாப் போராட்டம் உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. ஒரு இராணுவக்கட்டுக்கோப்புடன் எந்த சபலத்திற்கும் ஆட்படாமல் விடுதலைப்புலிகள்; இயக்கம் வீறுநடைபோட்டது.

அமைதிப்பேச்சுவார்த்தைகளும், போர் நிறுத்த ஒப்பந்தங்களும் அவ்வப்போது சமாதானம் என்கிற பெயரில் நடந்தபோதும், சிங்களப் பேரினவாதம் தன்பலத்தைத் தக்கவைத்துக்கொண்டும், உலகின் பலநாடுகளின் ஆதரவைத் தனக்கானதாக மாற்றிக்கொண்டும் இனப்படுகொலைகளை நிகழ்த்த சரியான சந்தர்ப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தீவிரவாதிகளைக் கொல்கிறோம் என்னும் பெயரில் இலட்சக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுகுவித்தனர். 2009 இல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் யுத்தம் தமிழர்களின் உயிர்வாழ்க்கையைக் கொன்றுகுவித்த சிங்களப் பேரினவாததின் வெற்றியாகச்சொல்லப்பட்டது. 

உலகத்தின் சர்வ வல்லமை மிக்க வல்லரசுகளும், அமைதி தேசங்களும், பொதுவுடமை நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கை சிங்களப் பேரினவாதத்திற்கு உறுதுணையாகப் போர்விமானங்களையும் கையெறி நச்சுக்குண்டுகளையும் கொடுத்து, தமிழர்களின் தேசத்தில் பேரழிவை உருவாக்கின. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பல இலட்சக்கணக்கான மக்கள் உடல் உறுப்புக்களை இழந்தும் கதறி அழுதகாட்சி மானுடம் போற்றும் மனிதர்களின் மனதில் ஆறாத வடுவை உருவாக்கின. ஆனால், அரசதிகாரவர்க்கங்கள் தங்களின் வெற்றியாக இதனை அறிவித்து மகிழ்ந்தன.

தொப்புள்கொடி உறவான தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்குப் பேரளவு ஆதரவு இருந்தபோதிலும் மத்திய மாநில அரசுகள் தமிழீழ ஆதரவாளர்களை வதைத்தும் சிதைத்தும் இந்திய இறையாண்மையைக் காப்பாற்றிக்கொண்டனர். வெற்று அறிக்கைகளும் வாய்ச்சவடால்களும் தமிழகத்தில் நிரம்பிவழிந்தன. தழிழக மக்கள் கையறு நிலையில் காட்சிதந்தனர்.

இச்சூழலில், மனிதகுலப் பேரழிவுகளில் சிக்கியும் சிதறுண்டும் வாழ்விழந்துபோன தமிழர்வாழ்வை ஈழப்படைப்பாளிகள் பலர் கவிதைகளாக புனைகதைகளாக, ஆவணப்படங்களாகக் காட்சிப்படுத்தி வருகின்றனர். குணா கவியழகன், தமிழ்நதி, சயந்தன், தீபச்செல்வன் போன்ற படைப்பாளிகளின் வரிசையில் அகரமுதல்வன் குறிப்பிடத்தக்க ஒருவராக, ஆளுமைமிக்க படைப்பாளியாக வளர்ந்து வருகிறார். இருபத்தைந்து வயதே நிரம்பிய அகரமுதல்வன் நான்கு கவிதைத் தொகுப்புகளையும், மூன்று  சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்துள்ளார்.

போர்க்களப்படைப்புகளைத் தீவிரத் தன்மையுடன் எழுதிவரும் அகரமுதல்வனின் படைப்பாளுமை தனித்திறன்கொண்டது. கவித்துவச்சொல்லாடலுடன் இரத்தமும் சதையும் கலந்த தமிழர் வாழ்வை, அழிவை ஆவணப்படுத்துகிற இவரின் ஆளுமை வியக்கத்தக்க ஒன்றாகும். ஈழப்போரில் நடந்த துயரங்களின் இரத்த சாட்சியங்களாக இவரின் சிறுகதைகள் அமையப்பெற்றுள்ளன. அகரமுதல்வனின் சிறுகதைகள் குறித்து நாஞ்சில் நாடன் இவ்வாறு கூறுகிறார்.

"அகரமுதல்வரின் இந்தக்கதைகள் அவரது வலிகளை நமக்கும் பெயர்க்கின்றன.புண்ணில் இருந்து தெறிக்கும் புழுவைப்போல வெறுத்து ஒதுக்கும் பெரும்பாலான இந்தி;யத் தமிழ்மனம் ஈழப்பிரச்சனையை அகரமுதல்வன் காட்சிப்படுத்தும் ஈழத் தமிழரின் வாழ்க்கை நம்மையே புண்ணாகவும் புழுவாகவும் உணரவைப்பது “

முள்வேலி முகாம்களும், அகதிவாழ்க்கையும்.

முள்வேலி முகாம்களும் அகதிவாழ்க்கையும் குறித்த பதிவுகளை "கிழவி", "திருவளர் ஞானசம்பந்தன்" என்னும் இரண்டு சிறுகதைகளில் காணமுடிகிறது. தத்தமது அரசதிகார நலன்களுக்காக, விடுதலைக்காகப்போராடும் மக்களை கொத்துக்கொத்தாய் அழித்த கோரமும், அதிகார வேட்டை நாய்களின் பாசிசத்திற்கு உலக அமைதிமன்றம் அனுமதியளித்த துர்ப்பாக்கியமும் உலகில் வேறெங்கும் நிகழாத ஒன்றாக ஈழமண்ணில் மட்டுமே நிகழ்ந்தது.

முள்ளிவாய்க்காலில் தாயும் தகப்பனும் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட பிறகு இருபத்து நான்கு வயது நிரம்பிய குயிலினி என்பவளும் அவளது பாட்டியான கிழவியும் காயங்களற்ற நிலையில் உயிர்தப்புகின்றனர். இவர்கள் இருவரும் முள்ளிவாய்க்கால் முள்வேலி முகாமில் வாழத்தலைப்பட்ட சூழலில், மக்களின் வாழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதனை ‘கிழவி’ என்னும் சிறுகதை எடுத்தியம்புகிறது. முள்வேலி முகாமில் பல்வேறு நோய்களில் மக்கள் மாண்டனர். நோயாளிகளாக நூற்றுக்கணக்கானவர்கள் மனநோயாளிகளாக இருந்தனர்.

வாழவழியில்லாமல் வெயில் கூடாரங்களில் வதைபட்டும் அம்மை நோயால் தாக்குண்டும் முகாமில் வாழ்ந்து வருகின்றனர். குயிலினிக்கு அம்மை நோய் கண்டிருந்தது. அவளை வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முற்படும் போதே அவள் பிழைக்கமாட்டாள் என்று பலரும் சொல்ல ஆரம்பித்தனர்.

கிழவியின் நம்பிக்கையும், அவளின் நுணுக்கமான அனுகுமுறையும் குயிலினியைக் காப்பாற்ற முயற்சிக்கிறது. குயிலினியை நோயிலிருந்து விடுவித்து, எப்படியாவது இந்த வதைமுகாமிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்ற கிழவியின் முயற்சி வெற்றிபெறுவதை இக்கதை தெளிவுபடுத்துகிறது. குயிலினி தனது ஒரு கண்ணின் பார்வை பறிபோனதைக்கூட கிழவியிடம் சொல்லவில்லை. கிழவியின் அறிவாற்றலும், எதையும் நினைத்து முடிக்கும் அவளது நுட்பமும் இக்கதை நெடுக வெளிப்படுகிறது.

அகதிமுகாம் குறித்த வாழ்வினை திருவளர் ஞானசம்பந்தன்கதை பதிவுசெய்கிறது. அகதிகள் என்கிற பெயரில் தமிழகத்தில் நிகழும் துயரங்களை இக்கதை வெளிப்படுத்துகிறது. சொட்டுச்சொட்டாக இரத்தம் காய்ந்து சிதைக்கும் அபாயங்கள் நிரம்பிவழியும் வெளியொன்றில் அகதிவாழ்வு நிகழ்வதாகக் கதையாசிரியர் சுட்டுகிறார். இரண்டு பாத்திரங்கள் பேசுவதாக வரும் பின்வரும் உரையாடல் குறிக்கத்தக்க ஒன்றாகும்.

"ஜீவிதா நாம் தமிழ்மொழி பேசக்கூடிய அகதிஇனமா?"

"இல்லை நந்திதா நாம் தமிழ்மொழி பேசுவதால் அகதி இனம்”

மேற்காணும் கூற்று தமிழ்அகதி குறித்த பதிவாக அமைகின்றது. வாழ்வில் எல்லாவற்றையும் இழந்துவிட்டு, கண்ணீரின் வெப்பச்சூட்டில் வாழ்ந்துகாட்ட வேண்டிய சூழல். சொந்த மண்ணை இழந்துவிட்டு அகதிகளாக, நாடற்றவர்களாக வாழவேண்டிய சூழலில் தன் தொப்புள் கொடி உறவான நாடே, தங்களை அகதிகளாகக் கருதும் போக்கின் கொடூரத்தன்மை உலகில் வேறெங்கும் நிகழாத ஒன்று. வாழவழியில்லாமல் வதைபட்டு வாழ்வோராக உலகில் தமிழனம் மட்டுமே காணப்படுவது இந்நூற்றாண்டின் துயரம் கலந்த சோகமாகும்.

மரண ஓலங்களும் போராளிகளின் வாழ்க்கையும்

"மரணத்தின் சுற்றி வளைப்பு", "சர்பவியாபகம்", "நிலமதி" என்னும் மூன்று கதைகளும் ஈழமண்ணின் மரண ஓலங்களையும், போராளிகளின் வாழ்க்கையினையும் அடையாளப்படுத்துகிறது.

 "நாம் வாழும் நிலத்தில் இறப்பதற்கு அஞ்சுவது வாழ்வதற்கு சலிப்பதுபோல்" என்றுரைப்பார் அகரமுதல்வன்.

ஒரு போராளியின் வாழ்வு என்பது எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்ததை உலகம் நன்கறியும்.
"நிலமதி"என்னும் கதையில் முகிலன் களத்தில் நிற்கும் போராளி தன் காதலியான நிலமதியோடு உறவாடுகிறான். போர்மேகம் சூழ்ந்த களத்தில், காதலியின் உயிர்ப்போடு வாழ்கிற போராளியாக முகிலனை அடையாளப்படுத்துகிறார். தம்வாழ்வின் இளமைக்கால வசந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு போராட்டக் களத்தில் போராளியாக வாழ்தலை உயிராக நேசித்த மாண்புடையவர்கள் விடுதலைப்புலிகள்.

விடுதலையை வென்றெடுப்பதை குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்ட புலிகளின் போராட்ட வரலாறு, காலத்தால் அழியாத இலக்கியமாகும்.

நிலமதியிடம் தன் பிரிவைச் சொல்லிவிட்டு களத்திற்குச் செல்கிறான் முகிலன். எங்கு நோக்கினும் இராணுவத்தினரின் குண்டுவீச்சுகள். அதனை முறியடிக்கும் போராளிகளின் வீரம்செறிந்த போராட்டங்கள். நிலமதியிடமிருந்து பிரிந்து போகிறபோது அவள் அன்பளிப்பாக வழங்கிய ஆடைகளையும் பலகாரங்களையும் பாதுகாக்கமுடியாத நெருக்கடியான சூழல். பதுங்கு குழிக்குள் அதனை வைத்துவிடுகிறான். எனினும்,
‘நாட்டைக் காப்பதைப்போல காதலின் பரிசுகளையும் போராளி காக்கவேண்டும்”என்ற உணர்வு மிக்கவன் முகிலன்.

களத்தில் இவனோடு கருமுகிலன், வானரசன், கனல்மாறன் போன்றோர் உள்ளனர். களத்தில் போர் விமானங்களிலிருந்து குண்டுகள் விழுந்தவண்ணம் உள்ளன. போராளிகளான வானரசன், கருமுகிலன் இருவரும் குண்டுவீச்சால் இறந்துவிடுகின்றனர். பதுங்கு குழிகளுக்குள் வாழ்ந்து கொண்டே போராடவேண்டிய நிலை. இறுதிவரை முகிலன் போராடிக்கொண்டே களத்தில் வீழ்கிறான்.

‘யுத்தத்தின் தகிப்பு ஒன்றாய்க் கூடுகிறது. போர்விமானங்கள் திசைமீறி தாக்குதலை தொடுக்கின்றன. போராளிகளின் துவக்குகள் உதிரத்தின் பேரண்டத்தில் இயங்கிக் கொண்டேயிருந்தது. எதிரியின் சடலங்கள் கருகிக் கிடக்கிறது. முன்னேறிக் கொண்டிருக்கும் எம் கால்கள் இரத்தத்துள் புதைகின்றது”

என்னும் பகுதி போரின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது.

மனைவி நித்திலாவிற்கு வதைமுகாமில் மின்சாரக் கம்பியால் அடைபட்டிருக்கும் போராளிக்கணவன் எழுதுகிற மடல் வடிவ உத்தியால் "மரணத்தின் சுற்றிவளைப்பு" என்னும் சிறுகதை அமையப்பெற்றுள்ளது. முள்வேலி முகாமில் நித்திலா உயிரோடு இருப்பதாகத் தகவல்கிடைக்கிறது. அதனடிப்படையில், காவலர் ஒருவரிடம் கையூட்டாக நகைகளைக்கொடுத்து, தன் மடலை நித்திலாவிற்குச் சேர்ப்பிக்குமாறு போராளிக்கணவன் கூறுவதாகக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கடும் சித்ரவதைகளுக்கு மத்தியிலும் தமிழீழம் குறித்தும், போராளி இயக்கத்தின் வீரம்செறிந்த பங்களிப்புக் குறித்தும் இக்கதை விரிவாகப் பேசுகிறது.

"நாம் எதிர்பாராத கசாப்புக்கடையில் தொங்கவிடப்பட்ட இறைச்சிகளைப் போல இரத்தம்   வழிய வழிய சுவாசிக்கப்பழகிவிட்டோம்”
என்னும் போராளிக்கணவனின் கூற்று, போராளிகளின் வாழ்நிலையை உணர்த்துகிறது. பலருக்கு முன்னால் ஆடைகளைக்களைந்து நிர்வாணப்படுத்தி, இராணுவத்தினர் செருப்புக்கால்களல் பிறப்பிறுப்பில் உதைத்தபோதும் கலங்காமல் விடுதலைத் தாகத்தோடு இருக்கும் போராளிகளை இக்கதையின் வாயிலாகப் பார்க்கிறோம்.

வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் தனது மனைவியின் நிலை குறித்த பரிதவிப்பும், குழந்தைப்பேறு எந்தவித இடர்ப்பாடுமின்றி இருக்கவேண்டிடும் என்ற எதிர்பார்ப்பும் போராளிக்கணவனின் கனவாகச் சுட்டப்படுகிறது. மீண்டும் இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பு அருகிவிட்ட நிலையில், எந்த நேரத்திலும் வதைமுகாமில் தான் கொல்லப்படக்கூடும் என்றெண்ணுகிறான்.

"நான் இறந்து கொண்டிருப்பதை தெரிந்த எமது நிலத்தின் ஒரு துண்டுவாய் திறந்து புதைகுழியாய் தயாராகி விட்டது"

என்னும் போராளியின் கூற்று, வாழ்வின் இறுதியை நோக்கிப்; பயணிக்கும் வாக்குமூலமாக அமைகிறது.

புலனாய்வுப் போராளி நந்திதன் குறித்த பதிவை "சர்பவியாபகம்" என்னும் சிறுகதை வெளிப்படுத்துகிறது. சிங்கள இராணுவத்திற்கு எதிரான போரில் பல்வேறு வெற்றிகளை ஈட்டியவர்களான விடுதலைப்புலிகள், மக்கள் இயக்கமாக மலர்ந்திருந்தனர். கலவரச்சூழலில் புலிகளின் தலைமறைவு வாழ்க்கை, இயக்கத் தலைமை வழிகாட்டுதலில் நிகழும். களத்தில் போராடுகிற ஒவ்வொரு புலிகளும் புலனாய்வுத்துறை போராளியினரால்; தீவிரமாகக் கண்காணிக்கப்படுவர். அந்த புலனாய்வுத்துறைப்போராளிகளையும் கண்காணிப்பதற்கு போராளிகள் சிலரை இயக்கம் அமர்த்தியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் ஒரு போராளியின் வீட்டில் புலனாய்வுத்துறைப் போராளி நந்திதன் தங்கியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு தலைமையின் அறிவுறுத்தலின்படி பல்வேறு இடங்களிலும் போராளியாகத் தன்னை காட்டிக்கொள்ளாமல் மக்களின் ஒருவராக நந்திதன் புலனாய்வுப் பணியினை மேற்கொண்ட தலைமறைவு வாழ்வியல் சூழலை இக்கதை அடையாளப்படுத்துகிறது. நந்திதனைக் கண்காணிக்கிற போராளியின் பெயர் நீலகண்டன் என்பதாகும்.

நீலகண்டனின் களவாழ்க்கையும் யுத்தகளத்தில் களமாடும் போராளிகளின் வாழ்வியல் சூழல்களும் இக்கதையில் விதந்து பேசப்படுகின்றன. நந்திதன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட காட்சியும், பிரேதப்பெட்டிக்குள் கிடந்த பிள்ளையை இறுக்கிக் கட்டியணைத்து அழுத அவரது தாயாரின் அவல ஓலமும் சுட்டப்படுகின்றன.

"இந்த நிலத்தில் மட்டும் தான் மரணித்த உயிருக்கு நிவாரணமாய் பரவசம்   திரும்புகிறது. விடுதலையின்  பரவசமாய் நாம் அனைவரும் மரணிப்போம்”
என்னும் போராளியின் கூற்றில் தமிழீழ விடுதலை தாகத்தின் இலட்சிய முழக்கத்தைப் பார்க்கிறோம்.

நிறைவாக அகரமுதல்வனின் கதைகள் வெறும் கதைகளல்ல. ஈழத்து மண்ணின் இரத்த உறவுகளை, வேர்களை இழந்து தவிக்கும் தமிழினத்தின் போர்க்களக் கதைகளாகும். உலக வரலாற்றில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளும், இலக்கிய வரலாற்றில் தடம் பதித்த அகரமுதல்வனும் காலகாலத்திற்கும் பேசுபொருளாக இருப்பர் என்பதை காலம் நிரூபிக்கும்.
                                                                          -------------------

முனைவர் மு.மதியழகன்,
துணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி
உடுமலைப்பேட்டை





Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்