கண்டி கலவரம் : ஜெப்னா பேக்கரி மற்றும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன
இருண்ட காலங்களில் பாடுவது இருக்குமா?
ஆம், இருண்ட காலங்களைப் பற்றிப் பாடுவது இருக்கும்.
-Bertolt Brecht
இலங்கையின் பவுத்த ராட்சத தேசியவாதம் இன்றைக்கு
தமிழ் இஸ்லாமிய மக்களையும்கா வுகொள்ளத்தொடங்கிற்று. இதனை சிங்கள இனவாதிகளும்,
அவர்களின் அதிகார அலகுகளும் எந்தக்
காருண்யமுமற்று செய்வார்கள். கடந்த வாரத்தில் இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி
மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாட்டவத்திலும் நடந்த
இருவேறு சம்பவங்கள் அப்பாவி இஸ்லாமிய
மக்களை அச்சத்துக்கு உட்படுத்தியிருக்கிறது. இஸ்லாமிய தலைமைகளும்,அமைப்பு
உறுப்பினர்களும் அரசின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு அறிக்கை வெளியிடுபவர்களாக இருக்கிறார்கள்.
இலங்கை சட்டத்தின் படி இன்னொரு தேசிய இனமாகவும் இலங்கையின் இரண்டாவது சிறுபான்மை இனமாகவும் இருக்கிற முஸ்லிம் மக்கள் மீது பெரும்பான்மை சிங்கள இனம் நடத்திய கொடூர வன்முறைக் காட்சிகளை இணையவழியாகவும் களத்தில் இருப்பவர்கள் சொன்ன தகவலின் மூலமும் அறிய முடிந்தது.இலங்கை என்பது பவுத்த நாடு.இந்தத் தீவே சிங்களர்களுக்கானது என்ற தம்மதீப கோட்பாட்டின் மூலம் தமிழர்களை அழித்தொழித்து பலவீனப்படுத்தியிருக்கும் சிங்கள அதிகாரம் இன்று அதன் கணக்கில் இன்னொரு தேசிய இனமாகவிருக்கிற முஸ்லிம்கள் மீதும் தனது இனவாதத்தின் சம்மட்டிகளை அடிக்கத்தொடங்கியிருக்கிறது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அளுத்கமவில் நடந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையைப் பார்க்கிலும் பலமடங்கு அதிகமாக நடந்திருக்கும் கண்டிக் கலவரத்தை மைத்திரி பால சிறிசேன ஆட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
இதற்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்கள் மட்டுமல்ல முஸ்லிம் தலைவர்கள் கூட உடனடியாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை.அப்பாவி மக்களின் தொழில்கூடங்களும், அவர்கள் வீடுகளும் வீதிகளும் சிங்கள வன்முறையாளர்களால் அழிக்கப்பட்டிருக்கின்றன.வீதிகளில் ரயர் போட்டுக் கொழுத்தி தீ வளர்த்து கலவரப்புகையால் வன்முறைக்கு உருவேற்றி இருக்கிறார்கள். பல்லின மக்கள் வாழும் இலங்கைத்தீவில் சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டுவரத்துடிக்கும் ஒற்றைத்தன்மைக்கே இத்தனை அநீதிகளையும் அரசு பின்நின்று செய்துகொண்டிருக்கிறது.இதனை இப்போது தான் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் உணர்ந்துகொள்கின்றனர்.
இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகளில் ஒருவரான ஹிஸ்புள்ளா முஸ்லிம்களுக்கு ஆயுதம் கொடுங்கள் என்று அரசிடமே கோரிக்கை
விடுத்திருக்கிறார். இன்னொருவரான ரிஷாட் பதியுதீன் "முஸ்லிம்களும் ஆயுமேந்தி
போராட வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
சிங்களர்களுக்கு எதிராக தமிழ் மக்கள் நடத்திய தியாகம் செறிந்த விடுதலைப்
போராட்டத்தை இவர்கள் எவ்வாறெல்லாம் விமர்சித்தனர் என்பதை பேசும் நேரம் இதுவல்ல.
ஆனாலும் ஒன்றை குறிப்பிடவேண்டும், வயிற்று வலி அவனவனுக்கு வந்தால் தான்
தெரிகிறது.
அடிப்படையில் தமிழ்- முஸ்லிம் உறவுவிரிசல் விழுந்த சம்பவமான யாழ்ப்பான வெளியேற்றத்தை மையைப்படுத்தி இரு இனக்குழுக்களையும் பிளவுபடுத்தும் வேலைகளைச் செய்துவருகிற ஓடுகாலி அறிவுஜீவிகளை அவர்கள் இந்தத் தருணத்தில் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். பழைய கசப்புணர்வுகளை இரு தரப்பினரும் மறந்து ஒட்டுமொத்தமாய் எம்மை விழுங்கத் துடிக்கும் சிங்கள பவுத்த ராட்சத பேரினவாதத்திற்கு எதிராக ஈழத்தமிழர்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக அணிதிரளவேண்டும். ஆனால் இதனைச் சாத்தியப்படுத்த தமிழ்தரப்பு எவ்வளவு முயன்றும் தோற்றுப்போய்க்கொண்டே இருக்கிறது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு ஆதரவாக களத்தில் கூட வேண்டாம்,அறிக்கை கூட வெளியிட்டவர்கள் கிடையாது. ரவூப் ஹக்கீம், ரிசாப் பதியுதீன் போன்றவர்கள் அரசின் செல்லப்பிள்ளைகள்.இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையின் தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் நடக்கும் மானுடப்படுகொலைக்கு கவலை தெரிவித்தேனும் ஒரு சொல் உதிர்க்காதவர்.அன்றைக்கு தமிழர்களுக்காய் உதிர்க்காதவர் என்றில்லை இன்று முஸ்லிம் மக்களுக்காய் கூட அவர்கள் வாய்திறக்கவில்லை.
இப்போது வேறு இது ஞாபகம் வருகிறது. தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப்
போராட்டத்தில் மகத்துவமான விடுதலை அமைப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் மீதிருக்கும் கடுமையான விமர்சனங்களில் ஒன்றான “யாழ் வெளியேற்றத்தை”மையப்படுத்தி
எழுத்தாளர் வாசுமுருகவேல் எழுதிய “ஜெப்னா பேக்கரி” நாவல் அண்மையில் ஈழ இலக்கியப்பரப்பில்
பெருத்த விவாதத்தை ஏற்படுத்தியது. அதனைக் கண்டித்து தனது வாழ்நாளுக்கான பெரியதொரு கட்டுரையை
எழுத்தாளர் ஷோபாசக்தி எழுதியிருந்தார். அதில் பகிடியான நிறைய அமசங்களில் எனக்குப்பிடித்தது
வாசுமுருகவேலின் நாவலில் இருக்கும் பொய்களை சான்றுகளுடன் சுட்டிக்காட்டியிருப்பதாக
குறிப்பிட்டு இருப்பார்.ஷோபாசக்தியே பொய்களைக் கண்டுபிடிக்கும் கலியுககாலத்தில் தமிழர்கள்
நாம் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர்களாய் இருக்கிறோம் என்பது தான் மனக்கவலை.
ஜெப்னா பேக்கரி நாவலில் யாழ் வெளியேற்றத்திற்கான காரணமாக அரசபடைகளுடன் கூட்டுச் சேர்ந்த அமைப்பொன்று முஸ்லிம்களின் மத்தியில் இருந்ததாக வாசுமுருகவேல் நாவலின் சாரத்தில் முக்கியமாக முன்வைக்கிறார்.ஆனால் அதனைப் பிரபாகரனும் சொல்லவில்லை, தமிழச்செல்வனும் கூட சொல்லவில்லை வாசுமுருகவேல் சொல்கிறார் என்று கொந்தளித்து எழுதியிருந்த உலக மகா பொய்யர் ஷோபாசக்தி இதுவரை நாட்கள் எழுதிய எத்தனை கதைகளை பிரபாகரனும் தமிழ்ச்செல்வனும் சொல்லியிருக்கிறார்கள். தங்கரேகை என்கிற கதையை பொய்யின் பனிக்குடத்தில் மல்லாக்காய்ப்படுத்தபடி எழுதிய நீங்கள் இன்னொருவரின் பிரதியில் பொய்யைக் கண்டுபிடிப்பதெல்லாம் சரியான முஸ்பாத்தி. சரி விடயத்திற்கு வருவோம். “ஆறுகள் ஓடத்தொடங்கினால் குப்பைகள் ஒதுங்கும்” என்றொரு வசனமுண்டு. அப்படித்தான் வாசுமுருகவேலின் நாவலும் சிலகுப்பைகளுக்கு ஆறாகிவிட்டது.
முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை அப்பட்டமான குற்றச்செயல் தான் என்பதை தமிழ்த்தரப்பு எத்தனையோ தடவை ஒப்புக்கொண்டுவிட்டது. ஒப்புக்கொண்டு விட்டால் நடந்த குற்றம் குற்றமற்றுப் போய்விடுமா என்று பதில் கேள்வி எழும்.ஈழத்தின் ஆயுத காலவிடுதலைப் போராட்ட காலத்தில் நடந்த அத்தனை குற்றங்களுக்கும் புலிகள் இயக்கத்தை குற்றம் சுமத்துபவர்கள் களரீதியான யதார்த்தங்களை அறியாதவர்கள் தாம். யாழ் வெளியேற்றம் களத்திடை நடந்ததொரு அசம்பாவிதம்.ஆனால் அதற்கு பூர்வாங்கமாக பதில் சொல்லவேண்டியது ஒரு தமிழீழ விடுதலைப் புலிகளே. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளை இன்று வரை ஆதரிக்கும் தமிழீழ விடுதலையை இன்று வரை எதிர்பார்த்திருக்கும் எத்தனையோ முஸ்லிம் மக்களை நான் அறிவேன். ஆனாலும் இந்தப் பிரச்சினையை தமது லாபங்களுக்காய் பேசிக்கொண்டே இருப்பவர்களை குறித்து காலம் கணக்கிட்டுக்கொள்ளும். ஊர்காவல்படை முஸ்லீம்களால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு எப்படி ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் பங்கில்லையோ அது போலவே யாழ்வெளியேற்றமும்.
அன்றைய காலம்தொட்டு இன்றுவரை தமிழ்மக்களின் உரிமைப் பிரச்சினையில் சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டிருந்த வெறுப்பின் வழியாக அவர்கள் மேற்கொண்ட தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கையில் நிறைய முஸ்லிம் இளைஞர்களுக்கு பங்கிருக்கிறது என்பதை ஷோபாசக்தி போன்றவர்கள் மறுத்தால் சரியே தவிர அதனைப் பெருமையாக பேசிக்கொள்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இலங்கையின் உளவுத்துறை அதிகாரங்களில் அவர்களுக்கிருக்கும் வகிபாகங்கள் குறித்தெல்லாம் நாம் வெளிப்படையாக பேசினால் “தமிழ் நாஸிகள்”என்று ஈழத்தின் அறிவுஜீவி கர்த்தாக்கள் ஐரோப்பிய நாட்டில் இருந்து எழுந்துவருவார்கள். அதற்கு மேலாக என்னை இந்துத்துவவாதியாகவும், இந்திய உளவுத்துறையாகவும் முகநூல் பதிவுகள் நிரம்பி வழியும்.
இங்கு எமக்கு அவசியாமானது உண்மைக்கு ஊழியம் செய்பவர்களாக இருப்பதைப் போல பாவனை காட்டிக்கொள்பவர்களோடு நாம் செய்யவேண்டிய யுத்தம்தான். முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு பிறகு விசாரணை அதிகாரிகளாக இருந்த பலர் தமிழ் முஸ்லிம்கள் தான் என்பதை விசாரணையை எதிர்கொண்ட எந்தவொரு தமிழனும் மறுக்கமாட்டன்.அவர்கள் விசாரணை செய்த தோரணைகளும், அடித்த நக்கல் கதைகளும், காறித்துப்பிய எச்சில்களும் லாச்சப்பலில் விழுந்திருக்காது.ஓமந்தையின் விசாரணைக் கொட்டில்களில் இருந்தவர்களின் முகத்தில் தான் விழுந்தன.அதற்கு எதிராக தமிழர்கள் ஒருபொழுதும் கையெழுத்து கூட்டறிக்கையை நடத்த மாட்டார்கள்.
நாளும் பொழுதும் தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு எதிராகவும் அவர்களின் நீதியான போராட்டத்திற்கு எதிராகவும் "போருக்கு வெளியே" என்று இலக்கிய நிகழ்வுகளை நடத்தும் மகாகவிகள் சிங்கள அரசின் இனவாதம் என்றால் என்னவென்று வகுப்பு எடுக்கும் பதிவுகளை எழுதத்தொடங்கி இருக்கிறார்கள். அய்யகோ! என் இறைவனே இப்போதேனும் இவர்களின் கண்களைத் திறந்தாய் உமக்கு கோடி நன்றி. மேலும் இந்தக் கலவரங்களுக்கு மத்தியில் அம்பாறையில் தமிழர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி அவர்களை வாயைத் திறக்கவையும்.
அதற்காக இந்த நேரத்தில் சிங்களவர்கள் செய்யும் அநீதிகள் அவர்களுக்கு தேவை தான் என்று சொல்லிக்கொண்டிருக்கும் மனம் தமிழனுக்கு இல்லை. இன்று இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன கண்டிக் கலவரத்திற்கு கவலை தெரிவித்து வெளியிட்டிருக்கும் கருத்துக்களை பார்த்தவர்களுக்கு அது விளங்கிவிடும். சிங்களவர்கள் இன்று நிம்மதியாக வாழ்வதற்கு முஸ்லிம்களே காரணமென்று கூறிய அவர் அதற்கான காரணத்தை இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
"யுத்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசின் புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னணியில் முஸ்லிம் சமூகமே முற்றுமுழுதாக செயற்பட்டது. எம்முடன் இணைந்து புலிகளுக்கும் தமிழீழ கோரிக்கைக்கும் எதிராக அவர்கள் பயணித்தனர். புலிகளின் பிரதேசங்களுக்குச் சென்று, மொழிப்புலமை பெற்று, அவர்களது உயிர்களை தியாகம் செய்து எமக்கு தேவையான தகவல்களை வழங்கி எம்மைக் காத்தார்கள்.
இவ்வாறான பின்னணியைக் கொண்டவர்கள் மீது இன்று தாக்குதல் நடத்தும் சிங்களவர்கள் உள்ளிட்ட அனைவரும் துரோகிகள். இன்று கண்டியில் குண்டுப் பயம் இன்றி அனைவரும் பயணிக்க முஸ்லிம் சமூகமே காரணம்.புலனாய்வுப் பணியில் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு அபாரமானது. அவர்களது பெயரை நான் குறிப்பிடத் தேவையில்லை. யுத்த காலத்தில் புலிகளால் முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டமைக்கும் இதுவே காரணம்.
பாதுகாப்புப் படையின் அதிகாரி என்ற ரீதியில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் குறித்து நான் கவலையடைகிறேன். தற்போது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் தரப்பினர் யுத்த காலத்தில் எந்த பங்களிப்பையும் வழங்கவில்லை.
இந்நிலையில், பாதுகாப்புப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு மக்களின் உயிரைக் காக்க போதுமான பாதுகாப்பை வழங்கிவருகின்றனர். அத்தோடு, சொத்துக்களை சேதப்படுத்துவதை தடுத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்’ என விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்."https://www.youtube.com/watch?v=mfaV3xkY_WI
இதனை வைத்துக்கொண்டு எல்லா முஸ்லிம்களும் தமிழீழ விடுதலைக்கு எதிராக இருந்தார்கள் என்று ஒருபோதும் சொல்லமுடியாது. செனட் சபை உறுப்பினராகயிருந்த யாழ்ப்பாணத்து அறிஞர் ஏ. எம்.ஏ. அஸீஸ் சொன்னதைப் போல ‘முஸ்லீம்களின் தாய்மொழி தமிழ்மொழி மட்டுமே’ என உணர்ந்தவர்கள் பலர் இந்தப் போராட்டத்தை இப்போதும் ஆதரிக்கின்றனர்.
இப்போது ஒரேயொரு விடயம் தான் சிறுபான்மை இனங்களான தமிழ் முஸ்லிம் மக்களின் முன்னால் இருக்கிறது. பழைய கசப்புக்களையும், வன்முறையால் காவு வாங்கப்பட்ட இரத்தக்களரிகளையும் பேசுவதையும் அதையே எமது வாதங்களாகவும் முன்வைப்பதையும் கைவிட்டு இனவாதத்திற்கு எதிராக அணிதிரள வேண்டும்.கூட்டறிக்கைகளும் எழுநூறு கையெழுத்துக்களும் எம்மில் தீ வளர்த்து குளிர் காய்வனவே என்பதை இருதரப்பும் புரிந்துகொள்வோம்.
ஒற்றுமையோடு நாம் சிங்கள ஆட்சியாளர்களின் இனவாதத்தை அடக்கவேண்டும். அதற்கு எம்மிடம் ஒரேயொரு ஆயுதத்தை மட்டுமே காலம் தந்திருக்கிறது. கடந்த காலத்தின் மன்னிக்கமுடியாத இருதரப்பு குற்றங்களையும் மறந்து நிகழ்காலத்திற்காய் என்றும் நினைவில் இருக்கும் ஒற்றுமையை அன்பால் நிகழ்த்துவோம்.தமிழீழ விடுதலைப் போராட்டமானது முஸ்லிம்களுக்குமானது என்று அவர்கள் உணர்ந்து கொள்ளத் தவறுகிறார்கள்.அவர்கள் உணர்வதற்கு இதுவுமொரு வரலாற்றின் வாய்ப்பு.
இப்பிரச்சினை தொடர்பாக கவிஞரும் நண்பருமான கிரிஷாந் எழுதிய கட்டுரையின் இறுதி வரிகள் இவ்வாறு அமைந்தன. அதுவே காலத்தின் கண்டிப்பான வேண்டுகோள்.
நம் அனைவரினதும் ஒற்றுமை மட்டும்தான் இருக்கும் ஒரே பலம். இனவாதத்திற்கெதிராக நாம் தூக்கிப்பிடிக்க வேண்டியது, அன்பின் வர்ணத்தில் ஒற்றுமையின் கொடியை.
உயர்த்திப்பிடிப்போம். எதிர்த்து நிற்போம்.http://maatram.org/?p=6745
-அகரமுதல்வன்
03.09.2018
ஷோபாசக்திக்கு பதில்... போதவில்லை எனத்தெரிகிறது
ReplyDeleteநான் நினைத்ததும் இதுதான் முதல்வா. நிதர்சனம்.
ReplyDelete