அகரமுதல்வனின் பான் கி மூனின் றுவாண்டா - கார்த்திக் புகழேந்தி

“எல்லாவற்றிலும் அரசியலுண்டு என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். உரையாடல்கள் அரசியலுக்கு அவசியமானது. அதன் அடிப்படையிலான உரையாடல்களையே தீவிரமாக இக்காலத்தில் விரும்பவும் செய்கிறேன். நான் உரையாடலை அரசியலின் அவசியமாய் அணுகுகிறேன். அதன் பரந்த வெளியும், ஜனநாயகமும் நாகரீகமான பரிணமிப்பின் சாட்சிகள்.
மூச்சு முட்டவைக்கும் பதில்களும், மறுத்து நிற்கும் பதில் கேள்விகளும் காலத்தின் உட்பொருள் கொண்டவை. அவைகள் நன்றென்றாலும், தீயவை என்றாலும் ஆழமாக நம்பவைக்கப் பட்டிருக்கும் அல்லது பழக்கப்படுத்தப் பட்டிருக்கும் எதிர்மறையான கருத்துக்களும், உருவாக்கங்களும் கேள்விக்கு உட்படுத்தப் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்”
குறிப்பிட்டுச் சொன்ன இவ்வார்த்தைகள்; ‘பான் கி மூனின் றுவாண்டா’ எனும் தன்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அகரமுதல்வனுடையது. தனது இந்த சிறுகதை நூலின் வெளியீட்டுக்காக எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனை தலைமையேற்கச் செய்தமைக்காக அகரமுதல்வன் பல தரப்பிலிருந்தும் கண்டனங்களுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதுபற்றி அகரமுதல்வன் அளித்த விளக்கமானது, இன்றைக்கு ஒரு தமிழீழத்தவனாக நான் நிர்க்கதியாக அரசியல் வெளியில் நிற்கிறேன். எனது தாயகமும், தாய்மார்களும் கண்ணீரோடு நிற்கிறார்கள். நான் உலகத்தின் கண்களை நேருக்குநேர் பார்த்து உரையாடவே விரும்புகிறேன்.” என்பதே அவர் பதிலின் சாரமாக இருந்தது. அந்த பதிலோடு நான் என்னை ஒப்புக் கொடுப்பவனானதால் இந்த மேடையில் வந்துநிற்கிறேன். ஏனெனில் நான் என்னுடைய சொந்தப் புரிதல்களால் இந்தச் சமூகவெளியில் இயங்குகிறவனாகவே என்னை எனக்குள் அடையாளங் கண்டுகொள்கிறேன்.
‘பான் கி மூனின் றுவாண்டாவாக’ ஈழத்தை முன்னிறித்தும் இந்தச் சொல் இந்த நூற்றாண்டின் பெருந்துயருக்கு ஐ.நா கொடுத்த உலகளாவிய அடையாளம். ஆப்பிரிக்காவின் மையத்தில் அமைந்திருக்கும் ருவாண்டாவில், 1994ல் நடைபெற்ற இனப் படுகொலை அந்நாட்டின் ஒவ்வொரு பெண்ணின் தந்தையையும், சகோதரனையும், கணவனையும் பிள்ளையையும் காவுவாங்கியிருந்தது. நவீன உலகின் ரத்தம் தோய்ந்த இனப்படுகொலை அடையாளம் ருவாண்டாவின் நெஞ்சில் விழுந்தது.
அங்கே சிறுபான்மை இனமாக இருந்த துட்சிகளை, பெரும்பான்மை இனமான இனவெறியூட்டப்பட்ட ஹூட்டு ஆயுததாரிகள் கொன்றொளித்தபோது உலகம் வழமைபோல் வேடிக்கைபார்த்துக் கொண்டாதானிருந்தது. துப்பாக்கியின் சன்னங்களுக்கான விலையை கொல்லப்படுபவனே ஏற்கவேண்டுமென்ற கொலைதர்மத்தோடு துட்சிகளை மாய்ந்து மாய்ந்து வேட்டையாடினது அதிகாரம். மீறியும் விட்டுப் போனவர்கள் அரிவாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.
ருவாண்டாவில் வாழ்ந்த துட்சிகளின் மக்கள் தொகைக்கும் அவர்களில் கொல்லப்பட்டவர்களுக்குமான விகிதாசாரத்தையும் விட ஈழநிலத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கும் அவர்களில் கொல்லப்பட்டவர்களுக்குமான விகிதாசாரம் அதனினும் அதிகம். ருவாண்டா உலக இனப் படுகொலையின் அடையாளமாகிறது. ஈழம் இன்றும் தமிழ் பத்திரிகைகளால் இலங்கை என்று உச்சரிக்கும் நிர்கதிக்குள் முடங்குகிறது. அதனால்தான், ஒரு துயரை இன்னொரு துயரத்தால் அடையாளம் காட்டுவதுபோல, ஈழ இனப்படுகொலையின் காய்ந்த உதிரத்தை பான்கி மூனின் றுவாண்டாவைக் கொண்டு சுரண்டுகிறார் அகரமுதல்வன்.


அகரமுதல்வனது இந்த தொகுப்பிலுள்ள ஒருபாதிக் கதைகள் போரின் உக்கிரத்திலிருந்து வெளிக்கிடப்பட்டும், படாமலும், நைந்துபோனத் தம் வாழ்வின் அவலங்களை எல்லாம் தமக்குள்ளாகப் பூட்டிக்கொண்டு, பழைய அடையாளைங்களை தொலைத்தும், துறந்தும், தேவைக்கருதி மறுத்தும் ஒன்றுமற்ற ஏதிலி மனங்களோடு வாழும் ஈழநிலத்தவர்களின் மனவியலையும், உளவியலையும் பேசுகிறது.
மற்றொருபாதி, நிகழ்வுகளாகத் தெரிந்த விடயங்களின் பின்னேயுள்ள உண்மைக்குள் ஊடுருவிச் சென்று, பிழைப்புவாதியாக உருமாறி, பழைய ‘புலி அடையாளத்தைச் சுமந்துகொண்டு நீசமான பொய்களை உருட்டிப் பிறக்கிக் கொண்டிருக்கும் சிவகரன்களையும், மங்கையனையும், பிரேமையும், படுக்கையிலிருந்து விழுந்த காயத்தை விழுப்புண்களாகக் காட்டிக்கொள்ளும் கண்டி வீரன்களையும் உடையுரித்து அம்பலப்படுத்துகின்றன.
அம்பலம் என்றால் பொதுசனங்கள் கூடும் அவையென்று பொருள். நான் தாமிர அம்பலத்திலிருந்து வருபவன். அகரன் யுத்த அம்பலத்திலிரிந்து வந்திருப்பவர். தனக்கு முன்னே எழுந்து ஓடியவர்கள் சொன்ன, சொல்கிற பொய்களுக்கெதிராக அவர் கேட்கிற நீதி உலகத்தின் அம்பலச் செவிகளுக்கானது. அதை தன்னுடைய கதைகளுக்கு ஊடாகச் சொறுகித் தருகிறார்.
நான் கவனித்து வந்த வரையில் அகரமுதல்வனது குரல் இந்த தொகுப்பில் மெல்ல மாறி இருக்கிறது. அது தஞ்சாவூர் கீர்த்தனைகளின் லயத்தையும், காருக்க்குறிச்சி அருணாச்சலத்தின் நாத ஆலாபனையையும் மொழிக்குள் கொண்டுவந்திருப்பது போல வெளிப்பட்டுக் குதிக்கிறது.
ஆம், சிந்தச் சிந்த ரத்தம் வடியும் வலிகளும், குண்டுகள் வெடித்த பின் கண்ணோடு வந்து ஒட்டிக் கொண்ட தசைப் பிசுபிசுப்பையும் குறைவாக்கி, நிலவியலையும் அழகியலையும் ஒன்றுகுவித்திருக்கிறார். லா.சா.ரா.,விடமும், அசோகமித்திரனிடமும் நான் கண்ட மொழியாள்கை அகரனிடமிருந்தும் தெறித்துவிழுகிறது. ஒருவகையில், அவர் கவிஞர்தானென்றாலும் கதைகளுக்கு ஊடாக அவர் கையாளும் தத்துவ விசாரணைகள் அடுத்த காகிதத்தை நோக்கி நம்மை நகரமுடியாமல் செய்கின்றன.
‘பெயர்’ என்ற தலைப்பில் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் முதல் கதை. காமம் செப்பாதுகண்டது மொழிமோ, பயிலியது கெழீஇய நட்பின், மயிலியற் செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே என்று செண்பகப் பாண்டியனுக்கு வந்த சந்தேகத்தினை ஒத்ததுபோல, இளம் அகதி ஒருத்தியின் வாசனையின் வேட்கையைக் கோரி நிற்கும் பெயரில்லா அகதியின் புலன்வேட்கைக்குள் ஊடுருவுகிறது.
‘தீபாவளி’ சிறுகதை, நிலத்தின் மீதும் போராட்டத்தின் மீதும் நீங்காத நம்பிகை கொண்டிருந்தவனின் இழப்புகளுக்குள் நின்று இந்தியாவின் ‘அமைதி’யைக் கேள்வி கேட்கிறது. புத்தனின் அமைதியைவிட கோரமானதாக உங்களுடைய அமைதி இருந்ததேயடா என்று கதிர்காமன் மண்வாரித் தூற்றுகிறார். தான் சந்திக்கும் 14வது இடப்பெயர்வு என்று ஒரு மனிதர் சாதாரணமாகப் புகையும்போது, காலடியின் நிலம் நழுவிவிடாமல் பற்றிக் கொள்கிறேன். இவள் ‘இந்திராவின் தாய், இவாவையும் இந்திய ஆர்மிக்காரன்தான் சுட்டவன்’ என்ற அவனின் குற்றச்சாட்டுக்கு வரலாற்றில் வயதாவதேயில்லை.


‘கள்ளு’ கதையில் வரும் கதைசொல்லி, கண்டிவீரனையும் தெய்வானையையும் குறியீடாக்கும் இடங்களும், ‘தாய்நாடும் இல்லை, தாய்களுக்கு முலைகளும் இல்லை’ என பாஸ்பரஸ் குண்டுகளால் போருக்குப் பின்னும் வதைபடும் மக்களின் இயல்பு, பிறழ்வுகளை காட்சிகளில் உதிக்காத வெளிச்சம்போல கலந்தும் புனைந்தும் சொல்லிப்போகும் முறை அடுத்த கதைகளிலும் நீட்சிபெறுகிறது.
கதைசொல்லி தன் காலத்தைப் பேசுகிறான். தான் சாட்சியாக இருந்த காலத்தின் கீழ்மைகளையும், நோய்மைகளையும் யுத்தத்தையும் பேசுகிறான். ‘குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் குற்றங்களைப் பெருக்குகிறார்கள்’ என்று சூசகமாகக் குற்றப்பத்திரிகை வாசிக்கிறான். தவறுகளுக்காக கடூழியச் சிறைவாசங்களை அனுபவித்து வெளியேறியவர்கள், தண்டனைக்குள்ளாக்கப்பட்டு இயக்கம் ஒழிக ஒழிக என்று கோஷமிட்டுக்கொண்டே, புலிகள் வீரச்சாவு அடையும்போது மறைமுகமாகப் புன்னகைப்பதையும், இராணுவத்தின் கைகாட்டியாக மாறுவதையும் கதைசொல்லியின் கண்கள் கவனித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த தொகுப்பின் தாழம்பூ, முயல்சுருக்குக் கண்கள், கரைசேரா மகள், குடாநாட்டில் எம்.ஜி.ஆர் கடத்தப்பட்டார் ஆகிய மூன்று கதைகளில் அகரன் ஒரு திரைக்கதை ஆசாமியாக உருமாறுவதாக உணர்கிறேன். காட்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றிமாற்றிச் சொல்லிச் சொல்லும் முறை சுவாரஸ்யமாக அமைகின்றன. இழப்புகளை சுவாரஸ்யமாக மற்றவனுக்குச் சொல்லுவதுகூட ஒருவித போர்நடவடிக்கைதான் போல.
மற்றபடி தந்தம், சங்கிலியன் படை இரண்டு கதைகளும் வாசிக்கும்போது, அங்கங்கு எனக்குக் கதாப்பாத்திரங்களின் பெயர்களால் புரிந்துகொள்ளும் குழப்பங்கள் வந்துபோனபடி இருந்தன. காட்டுக்குள் வேட்டைக்குப் போகும் ‘முயல்சுருக்குக் கண்கள்’ சிறுகதை அவ்வளவு கவிதையாக விரிந்தபோது, அதற்குள் அகரன் பேச நினைக்கிற சின்ன இடங்கள் தான் ஈழத்தில் எரிந்து, புதையுண்ட ஆன்மாக்களின் நினைவலைகள்.
“இந்த நிலம் முழுக்க வெவ்வேறு வேட்டைகளாலானது. எல்லோர் கூடாரங்களிலும் பலியின் கொடி அசைந்து கொண்டேயிருக்கிறது. ஆதவி எங்களை யுத்தமும் குண்டுகளும் வேட்டையாடுகின்றன. கொடூரத்தின் கண்களில்தான் நாம் தவழத் தொடங்குகிறோம். இன்றைக்கு இந்தக் காட்டில் இதுவரை கேட்காத துவக்குகளின் பேரொலி அடுத்த கணத்தில்கூட வெடிக்கலாம். நம்மைச் சுற்றிக் காவல் செய்யும் போராளிகளை மரனம் சுற்றியிருக்கிறது. வளர்ந்த இந்த காட்டு மரங்களைப்போல எங்களின் தியாகம் உயர்ந்திருக்கிறது. ஆதவி! நீ கலங்காதிரு உன் அப்பாவை இந்த வனத்தின் காந்தள் மலர்கள் ஒவ்வொன்றிலும் பார்” என்கிறார்.
காந்தள் மலர்கள் காடு நிறைக்க மலரட்டும் என்பதுதானே நம்முடைய எண்ணமும்.
அன்புடன்,
கார்த்திக் புகழேந்தி
16-12-2017

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்