அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்



மனித நாகரிகம் தன்னுடைய லட்சிய மேன்மையை அடைய விடாமல் தடுக்கும் வாழ்வியல் அம்சங்களுள் முதன்மையானது போர். போரின் அழிவாற்றல் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் தமிழகவாழ் தமிழர்களுக்கு போரின் குரூரங்களோடு நேரடி அனுபவம் இல்லை. இது ஒரு நல்வினை. சக தமிழினம் அண்டை நாட்டில் தன்மானப் போரிட்டு அழிந்ததை ஊடகங்கள் வாயிலாக மட்டுமே அரைகுறையாய் அறிந்து வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலிகள் நாம். போரின் குரூர முகத்தை, போருக்குப் பிந்தைய வன்முறையின் அவலங்களை நாம் சென்ற நூற்றாண்டிலோ தொடர்ந்து வரும் இந்த நூற்றாண்டிலோ அனுபவித்ததில்லை. இதனால் போர் இலக்கியங்கள் பற்றிய புரிதல் நமக்கு சற்றுக் குறைவாகவே இருக்கிறது.

போர் ஏற்படுத்தும் அழிவின் ஆவணங்கள் நமக்கு எந்தப் படிப்பினையையும் கொடுப்பதில்லை. என்ற போதிலும் போருக்குப் பிந்தைய உபவிளை பொருளாக நமக்குக் கிடைப்பது போரைப் பற்றிய இலக்கியப் பதிவுகள்.

உலக வரலாற்றில் போர்கள் அனுபவமாகியிருக்கும் பெரும்பான்மை நாடுகளிலும் உன்னதமான போர் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. நாடுகளுக்கிடையிலான போர்கள் மட்டுமன்றி அதே அளவிலான உக்கிரத்துடன் உலகெங்கிலும் நடைபெற்ற பல மூர்க்கத்தனமான புரட்சிகள் வெடித்த போதெல்லாம் நல்ல போர் இலக்கியங்கள் மலர்ந்துள்ளன. உரிமையும், உரிமை மறுப்பும், ஆயுதமும் ஆயுத எதிர்ப்பும், சமாதானமும் சமாதான மீறலும் இந்தப் போர் இலக்கியங்களுக்கான கருப்பொருளாக ஆகி இருக்கின்றன. அதுமட்டுமன்றி, காட்டிக்கொடுத்தல், பொருளாதாரத் தடை, பழிவாங்கல், பண்பாட்டு அழிப்பு போன்றவையும் இந்தப் போர் இலக்கியங்களுக்கான பாடுபொருளாகவும் பேசுபொருளாகவும் அமைந்திருக்கின்றன. ஒரு நாட்டுக்குள் இன, மத, ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடிய உள்நாட்டுப் போர்களிலிருந்தும் பல உன்னதமான இலக்கியங்கள் தோன்றி இருக்கின்றன.  

மன்னார் மறைமாவட்டச் சமூகத்தொடர்பு அருட்பணி மையமான கலையருவிஇயக்குனரும், மன்னார் பத்திரிகை ஆசிரீயரும், மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. அன்ரன் ஸ்ரீபன் அடிகளாரின் உயிர்ப்பதிவுஎன்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு போர் இலக்கியங்கள்தொடர்பான சிறப்புரையை ஆற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார். (http://thazal.com/archives/author/admin1/page/8)

நம் அண்டை நாடான இலங்கையில் தமீழீழம் அமைய வேண்டிப் போராடி லட்சக்கணக்கில் உயிர்களைக் காவு கொடுத்த உன்னதப் போர் உயிர்ப்பதிவுபோன்ற நல்ல இலக்கியப் படைப்புகள் உருவாகத் தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது. 985ஆம் ஆண்டு வெளிவந்த மரணத்துள் வாழ்வோம்என்ற கவிதைத் தொகுப்பு போரைப் பதிவுசெய்த முதலாவது இலக்கியத் தொகுப்பாகும். இதனைத் தொடர்ந்து போரையும் போரின் வலிகளையும் பிரதிபலிக்கும் பல கவிதைத் தொகுதிகளும் சிறுகதைத்தொகுதிகளும் நாவல்களும் நாடகங்களும் வெளிவந்துள்ளன.என்றும் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிடுகின்றார்.

சங்ககாலத்தில் எழுந்த புறத்திணை நூல்களைத் தமிழில் போர் இலக்கிய மரபின் ஆரம்பம் என்று சொல்லலாம். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்ற ஏழு திணைகளாகப் புறப்பொருளை வகுத்துக் கவிதை இயற்றலாம் என்று தொல்காப்பியம் வரம்புரைக்கிறது. இவற்றில் காஞ்சி, பாடாண் ஆகிய இரண்டினைத் தவிரப் பிற ஐந்து திணைகளும் போர் தொடர்பானவை. இரு தினங்களுக்கு முன் தன் தந்தையைப் பறி கொடுத்த ஒரு பெண் முந்திய தினத்தில் கணவனைப் பறி கொடுத்து விட்டு, இன்று போர்ப்பறை கேட்டதும் தன் ஒரே மகனை, இளஞ்சிறுவனைக் கையில் வேல்தந்து போருக்கு  அனுப்பி வைத்தாள்என்ற புறநானூற்று செய்யுள் பள்ளிப்பருவத்தில் அறிமுகம் ஆன ஒன்று

போரில் என் மகனுக்கு முதுகில் காயம் பட்டிருந்தால் அவனுக்குப் பாலூட்டிய என் மார்பை அறுத்தெறிவேன்,” என்பது போன்ற தாயின் சூளுரைகளும் கூட அந்த அகவையில் மாணவர் நெஞ்சத்தில் சிலிர்ப்பேற்படுத்தியவை. அவனைப் பெற்ற நாளில் உற்ற மகிழ்ச்சியை விட அதிகமான உவகையைத் தன் மகன் மார்பில் காயம் பட்டு மாண்டு கிடப்பதைக் கண்ட பெண் ஒருத்தி அனுபவித்தாள்என்றும் சங்க இலக்கியச் செய்யுள் ஒன்று விவரிக்கிறது. இந்தச் செய்திகளையெல்லாம் சங்ககாலப் போர்முறைகளும் விதிகளும் என்ற கட்டுரையில் பேராசிரியர். .பூரணச்சந்திரன் நேர்த்தியாகத் தொகுத்துத் தருகிறார். (http://siragu.com/?p=13715)

இவை போன்ற ஏட்டுத் தகவல்கள் தவிர நமக்குப் போர் பற்றியோ வீரம் பற்றியோ நேரடிப் பரிச்சயம் இருந்ததில்லை என்றுதான் கூற வேண்டும். நாடாண்ட மன்னர்கள், குறுநில மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்த போர்களைப் பற்றி வரலாற்று நூல்களில் விவரிக்கப்பட்டவற்றை மட்டும்தான் நாம் படித்திருக்கிறோம். போரில் வெற்றி பெறுபவர்களே போருக்குப் பிந்தைய விதிகளை வகுக்கிறார்கள். வலிமையே நியாயம் எனும் கொடூர விதி அது. இதை மாற்றி அமைக்கும் விதமாகவே நாகரிகத்தின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிநிலையாக மக்களாட்சி முறை உருவெடுத்தது. ஆனால், மக்களாட்சி அமைப்பிலும் பண வலிமை, அதிகார வலிமை, எண்ணிக்கைப் பெரும்பான்மை எனும் வலிமை ஆகியன நியாயத்தை நிறுவும் அம்சங்களாகி விட்ட அவலம் நேர்ந்திருக்கிறது.

இந்தச் சூழலில்தான் நாம் தமிழீழ இலக்கியத்தை எடைபோட வேண்டியிருக்கிறது. மக்களாட்சி முறையில் நாம் தேர்ந்தெடுத்திருந்த தலைவர் ஒருவரைக் காவு கொடுத்த நிலையில் நம்மில் பெரும்பான்மையோருக்கு தமிழீழம் எனும் கருத்துரு அவ்வளவு உவப்பான ஒன்றாக இருப்பதில்லை. இதன் காரணமாகவே தமிழீழப் போராளிகள் படைக்கும் இலக்கியமும் நம்மிடையே போதிய கவனிப்புப் பெறுவதில்லை. நாமே அசட்டை செய்யும் ஒரு இலக்கியம் உலக கவனத்தை ஈர்க்காமல் போனதில் வியப்பேதும் இல்லை. ஒரு பாலஸ்தீன இலக்கியம் பெறுகின்ற கவனத்தை, அயர்லாந்து நாட்டுப் போராளிகள் படைத்த இலக்கியம் பெற்ற கவனத்தை நம் தாய்மொழி இலக்கியம் பெறாமல் போனதற்கு நாம் நம்முடைய இலக்கியங்களைப் புறக்கணிப்பதே காரணம்.
இந்த உள்ளக் குமுறல் சமீப காலத்தில் என்னுள் ஓங்கி ஒலிக்க அகரமுதல்வனின் சிறுகதைகள் காரணமாகின்றன.       



ஒரு வீதியின் பள்ளத்தில் மக்கள் உடல்கள் சிதறிக் கிடப்பதையும் அவர்களில் இருந்து இரத்தம் ஓடுவதையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத உங்களிடம் யுத்தத்தின் அசலைச் சொல்லு என பணிக்கும் இந்தக் கதை சொல்லிக்கு நான் என்ன பதிலைச் சொல்வேன்? நீங்கள் திரைப்படங்களையும் தொடர்நாடகங்களையும் விட்டு விட்டு இந்த யுத்த பக்கத்தைக் கேட்டுணர்வீர்கள் என்று நான் நம்பியது கிடையாது. என்றாலும் இந்தக் கதை சொல்லி உங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் சொல்லுவதுதான் முடிவாகி விட்டது. இந்தக் கதையைக் கதைசொல்லி சொல்லப்போவது கிடையாது. ஏனென்றால் ஒரு யுத்தகால உண்மைக்கு கதைசொல்லி தேவையில்லை. யுத்த நிழல் படிந்தவன்தானே வேணும்? நானே சொல்லுவதுதான் சத்தியத்தின் சேவகமாக இருக்கும்.” (அம்மாவும் அமெரிக்காவும் சிறுகதையில் கணையாழி நவம்பர் 2015 இதழில்)
இதுதான் அகரமுதல்வனின் நிலைப்பாடு

தன்னுடைய போர்க்கள அனுபவங்களை, நினைவு ரணங்களை வெளியே சொல்லாமல் தேக்கி வைக்க முடியாத ஒரு எழுத்தாளனின் தவிப்பு. ஒரு கதைசொல்லியாக அவ்வனுபவங்களைப் புனைவாக்குவதா? அல்லது உண்மையை, நிதர்சனத்தை, யதார்த்த நடையில் உணர்ச்சியற்ற ஆவணமாக்குவதா? புனைவு என்ற நிராகரிப்புக்கும் உள்ளாகாமல், ஜீவனற்ற யதார்த்தச் சித்திரிப்பு என்ற புறக்கணிப்புக்கும் ஆட்படாமல் தன்னுடைய உணர்வுபூர்வ மொழி நடையாலும், நுணுக்கமான விவரிப்புகளாலும் உண்மைக்கு உயிரூட்டி இலக்கிய நயமூட்டி அவலத்தையும் அழகியல் கூடிய காட்சியாக்குகிறார் அகரமுதல்வன்.

நவீன விருட்சம்இலக்கிய இதழின் ஆசிரியர் திரு. அழகிய சிங்கர் ஒருமுறை கூட்டியிருந்த கூட்டத்தில் எழுத்தாளர் திரு. கௌதம சித்தார்த்தன் எழுத்தாளன் இறந்து விட்டானா?’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ‘மாய யதார்த்தம் எனும் பின் காலனீய, பின் நவீனத்துவ கதைகூறு யுத்திக்கு யதார்த்தச் சித்திரிப்பைத் தனது பிரதான உத்தியாகக்  கொண்டிருந்த  நவீனத்துவம், வழிவிட்டது. ஆனால் பின் நவீனத்துவத்துக்குப் பிறகான தமிழ் இலக்கியச் சூழல் புதிய யுத்திகளைக் கைக்கொள்ளாமல் மீண்டும் யதார்த்தத்தையே தஞ்சம் அடைந்து வருகின்ற தேக்க நிலை எழுத்தாளன் இறந்து விட்டதை உணர்த்துகிறது’ என்ற பொருள்படும் வாதங்களைத் திரு. கௌதம சித்தார்த்தன் அன்று முன் வைத்தார். படைப்பைப் பிரசவித்தவுடன் எழுத்தாளனுக்கும் படைப்புக்கும் இருக்கும் உறவு முடிந்து, வாசகனுக்கும் படைப்புக்குமான உறவு மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும் நிலையை ரோலந் பார்த்தின் எழுத்தாளன் இறந்து விட்டான் என்ற பிரபலமான கட்டுரை முன் வைக்கிறது. இதைக் குறிப்பிட்ட திரு. கௌதம சித்தார்த்தன் இலக்கிய மரபு பற்றிய போதுமான அறிவோ தெளிவோ இல்லாமலேயே இலக்கியம் படைக்க முனையும் பெரும்பான்மையான இளம் எழுத்தாளர்களின் போக்கைக் குறையாகக் கூறினார்.

இதன் பின்னணியில் பார்க்கும் பொழுது யதார்த்த சித்திரிப்பையே தன்னுடைய கதைகளின் யுத்தியாகப் அகரமுதல்வன் பின் பற்றுவதை ஒரு குறையென்று கூற முடியுமா? திரு. கௌதம சித்தார்த்தனின் உரையைக் கேட்டு விட்டு வந்த பிறகு இந்தக் கேள்வி என் மனதில் மேலோங்கி இருந்தது.

இலக்கியத்தின் முதல் கருப்பொருளாக மட்டுமின்றி, அதன் ஒரே கருப்பொருளாகக் கூட போர் ஒரு சில காலகட்டங்களில் இருந்திருக்கிறது. எழுத்தோடு போருக்கிருக்கும் உறவு எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கமானதோ அதே அளவுக்கு உறுத்தலானதும் கூட. கொண்டாடும் விதமாகப் படைப்பு வடிவங்களை ஈன்றிருக்கும் அதே போர் விமர்சிக்கும் விதமான படைப்பு வடிவங்களையும் பிறப்பித்திருக்கிறது. இலக்கியத்தில் பெரும் பிரமிப்புடன் விவரிக்கப்பட்டிருக்கும் போர்த்திறமும் வீரமும் அதே வீச்சில் அளவு கடந்த சகிப்பின்மையோடும் அணுகப்பட்டிருக்கின்றன. போரின் உண்மையான நெருக்கடிகளோடு வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டிருக்கும் இலக்கியம் வாழ்வின் அதிமுக்கிய பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசியவாறுதானிருக்கும்.

நிகழ்கால வாழ்வுடன் போர் சிக்கலான விதத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் விதத்துக்கு இலக்கியம் சில தடயங்களை அளிக்கும். மக்களின் எல்லா வாழ்நிலைகளிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அம்சங்களாகப் போரும் போராட்டமும் இருந்து வந்திருக்கின்றன. அது மத சார்பற்ற இலக்கியமானாலும் சரி, மத இலக்கிய வடிவமானாலும் சரி, போர் என்பது மிக வலிய, தொடர்ந்து தாக்குப் பிடிக்கிற, மீண்டும் மீண்டும் நாடப்படுகிற கருப்பொருளாகவே விளங்குகிறது. போர் என்னும் கருத்துரு இலக்கியத்துக்கு மட்டுமில்லாமல் வீர உணர்வுக்கு, மத சார்புக்கு, நாட்டுப்பற்றுக்கு, பால் விகுதிக்கு, உடல் மற்றும் உள்ளத்துக்கு மையமாகத் திகழும் முதன்மைக் கருப்பொருளாக விளங்குகிறது. இலக்கியத்தில் போரைப் பற்றியும் போராட்டங்களைப் பற்றியும் பேசும் இலக்கியத்துக்கு விதவிதமான எதிர்வினைகள் தோன்றியிருக்கின்றன. 



போர் என்பது நிகழ்ந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் அதைப் புரிந்து கொள்ள எழுத்தாளர்கள் முயன்று வருகின்றார்கள். போர்க்களத்தின் பயங்கரங்களை விவரிப்பாக்கி இருக்கிறார்கள். போரின் சிதைவுகளிலிருந்து பயனுள்ள எதையாவது தேடிக் கண்டுபிடிக்க முயன்றிருக்கிறார்கள்.
2015 செப்டம்பர் மாத உயிர் எழுத்துஇதழில் வெளியான பைத்தியத்தின் தம்பி எனும் சிறுகதை வாயிலாகத்தான் எனக்கு அகரமுதல்வனின் எழுத்துலகு அறிமுகம் ஆனது.

லக்ஷ்மி சரவணகுமாரின் மனம் கலக்கும் கவிதை வரிகளை முன்னுரையாக்கி எழுதப்பட்டிருக்கும் சிறுகதை பைத்தியத்தின் தம்பி’. போர்க்கைதிகளுக்கான மருத்துவ முகாமில் சிகிச்சைக்காக அடைபட்டிருக்கும் போர்க்கைதியின் ஓரிரவு அனுபவத்தைக் இந்தச் சிறுகதை பேசுகிறது. அந்த மருத்துவ முகாமில் தாதியாகப் பணியாற்றும் சம்பந்தி ஒரு சிங்களப் பெண். அவளும் ராணுவப் புலனாய்வுப் பிரிவைச்  சேர்ந்தவள். அந்த முகாமில் ஒரு பயங்கரத் தோற்று நோய்க் கிருமியாய்ஆர்மிக்காரனும் போலிசும் சிகிச்சை பெற்று வரும் கைதிகளைச் சுற்றியே இருப்பார்கள் என்பதில் தொடங்கி அந்த மருத்துவ முகாமின் சூழல் விவரிக்கப்படும் விதம் மிக நல்ல இலக்கிய அனுபவம்.
மனதைக் கலங்க அடித்த இந்தக் கதையைச் சொல்லும் போக்கில் அகரமுதல்வன் கையாண்டிருக்கும் கவிதை போன்ற படிமங்கள் குறிப்பிடத்தகுந்தவை

இப்படித்தான் பசியும் தாகமும், நோயும் வதையும் ஆக்கிரமித்திருந்த உடலைத் தூக்கிச் சுமந்தபடிக்கு வாழப் பழகியிருந்தோம்என்று கதை சொல்லி கூறும் இலக்கியத் தொனி மனதை நெகிழ வைக்கும். மடங்கிய கோப்பைச் சரி செய்யும் அவனின் மூச்சில் என்னை அடித்ததின் பற்றாக்குறை இரைத்ததுஎனும் வாசகம் அந்த முகாமில் இருந்த இராணுவத்தினரின் வன்ம உணர்வைத் துல்லியமாகப் படம் பிடிக்கிறது. கடந்து கொண்டிருக்கும் இரவு நேற்றைய இரவை விடவும் அவமானத்திலும் வலியிலும் பெருத்திருந்தது. வார்டில் படுத்திருக்கிற இருபது பேரின் மன சஞ்சலங்கள், ஒலியெழாத அழுகைகள், குழுசைகளின் வெக்கை என இரவு நெடுக நிலவும் அமைதிக்குள் சுழலும் நித்திரையும் துயரம் போர்த்த கனவுகளும் பயங்கரத்துக்குச் சொந்தமானவை.அந்த முகாமின் அச்சமூட்டும் சூழலைக் கச்சிதமான சித்திரமாக்குகிறார் கதாசிரியர்

இரவுகளில் நடக்கும் சண்டைகளில் ஆயுதத்தின் சத்தமும் எண்களின் உக்கிர வார்த்தைகளும் சிந்திய குருதிகளும் இரவுக்குச் செந்நிறத்தை அல்லவா தந்தது! இரவென்றால் என்னை அரவணைக்கும் செந்நிறத் தாயாகவல்லவா பழக்கமானது.ஒரு போராளிக்குப் பிடித்தமான போர்ச்சூழலை எண்ணி ஏங்கும் உணர்வு மிகப் பாங்காக வெளிப்படுகிறது.

இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் காலமாகவே நிகழ்ந்த இரவில் அதன் நிறம் மாறியிருப்பது இரவை வெறுத்திராத ஒரு போராளிக்கு அச்சத்தையும் பதகளிப்பையும்தந்து கொண்டிருந்தது. அந்த நள்ளிரவில் எங்கள் தலைவன் பிரபாகரன் என்று முழங்கு சங்கே முழங்குஎன்று இரவின் பயங்கரத்தையே மிரட்டும் வண்ணமாக ஒரு பெண் பாடுவது அந்த முகாமில் ஒலிக்கிறது. அந்தப் பாடலைக் கேட்டு, “இரவின் சப்தம் தகிப்பின் சுழியில் சிக்கிக் கொண்டதென நினைத்தேன்என்று அந்தப் போராளி எண்ணுகிறான். அவளோ நானோ பார்க்க முடியாத நட்சத்திரங்களைத் தனது குரலை ஏவி தரையில் வீழ்த்தினாள்என்று அந்தப் பாடகியின் பாட்டின் வீர்யத்தைப் பேசும் போராளி இந்தப் பெண்ணோடு கொள்ளும் சகோதர வாஞ்சையின் முடிவைக் கதை மிக இயல்பான அனுபவமாக்குகிறது.

பங்கரும் கடதாசிக் கூட்டமும், சாவுகளும், காயங்களும், தாகமும்,  பட்டினியும் என்று குழப்பமான கொடூரத்தில் கலைக்கப்பட்டிருந்தவாழ்வை அம்மாவும் அமெரிக்காவும்என்ற சிறுகதை (கணையாழி - நவம்பர் 2015) முன்வைக்கிறது
தனக்குள் குவிந்திருக்கும் உயிர்களின் ஆறுதலுக்காய் தனக்குள் குடிகொண்டிருக்கும் இருளைமேலும் இருட்டிக்கும் கணங்களை வர்ணிக்கும் விவரணை. வீட்டின் முன்னால் இருந்த கொய்யா மரத்தடியில் பாத்திரம் கழுவுவதற்காக இருந்த அந்த அக்காவின் தலை சிதறிக் கூழாம்பழம் போல் கிடந்ததுஎன்று போரின் குரூரத்தைக் கதை புலம்புகிறது. கருவாட்டுக் குழம்பு வைத்த சட்டிக்குள் அந்த அக்காவின் கண்ணொன்றின் சிறு துண்டு எஞ்சிக் கிடந்ததுஎனும் விவரணை வாசக மனதின் நெஞ்சுரத்தை அசைத்துப் பார்க்கிறது. தொடர்ந்து வருகின்ற வர்ணனை அசைத்த நெஞ்சுரத்தை முற்றிலுமாக ஆட்டம் காண வைக்கிறது

இந்த யுத்தம் வினோதம் நிறைந்த பல காட்சிகளை எல்லாம் எங்கள் கண்களுக்கு நிகழ்த்திக் கொண்டே இருந்தது. சாப்பாட்டுத் தட்டில் மனித தசைத் துண்டங்களைப் படையலிட்டது. செத்துப் போன தாயின் முலையில் குழந்தையைப் பால் குடிக்கச் செய்தது. சாவின் வலயத்தில் வாழ்வு அணையை, செத்துப் போன குழந்தையைக் காப்பாற்றச் சொல்லியபடியே பல தாய்களைக் கொன்றது. இந்த யுத்தத்தின் காட்சிப் படிமங்கள் எல்லாம் யுத்தங்களுக்கே புதியவை.” ‘இந்த மரணச் சலிப்பின் அனுதாபக் கோரிக்கையிலும் ஒரு சாட்சியம் குண்டைப் போல வெடித்ததை நீங்கள் உணர்கிறீர்களா?’ என்று வாசக மனதை உலுக்கும் கேள்வியை வீசும் இந்தக் கதையின் முடிவு நம் மனசாட்சியை பகடி செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்த நிலத்தில் வாழும் ஒவ்வொருத்தருக்கும் பொதுவான பிரேதக்குழியை யுத்தம் உருவாக்கியது. மறு பக்கத்தில் குழந்தைகளின் ரத்தத்தில் தனக்கு வாசத்தை பூசிக் கொண்டதுஎன்று விவரிக்கும் சாம்பவிகளுக்கான விடுதலைஎனும் சிறுகதை (உயிர் எழுத்து பிப். 2016) மூன்று விரல்களை வாய்க்குள் வைத்து சூப்பத் தொடங்கியிருக்கும் சாம்பவி போன்ற பச்சிளம் குழந்தைகளிடம் கூடக் கருணை காட்டாத போர்க்கைதி மருத்துவ முகாம்களின் ஈரமற்ற இதயத்தை எடுத்துக் காட்டுகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு அனுபவங்களை முன்வைத்து குணா.கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு. அப்பால் ஒரு நிலம் என மூன்று நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழீழப் போராளிகளின் முள்ளிவாய்க்கால் சரணுக்குப் பிறகு சிங்கள ராணுவத்தின் வதை முகாம்களில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்ப எப்படி முனைப்புடன் செயல்பட்டார்கள் என்பதற்கு உதாரணம் காட்ட வல்லதாக அகரமுதல்வனின் கிழவிஎனும் சிறுகதை (கணையாழி ஏப்ரல் 2016) அமைகிறது

இருபத்தி நான்கு வயதுக் குயிலினியும், அவளின் அம்மம்மாக் கிழவியும் முகாமில் அடைபடுகிறார்கள். அங்கே குயிலினிக்கு அம்மை நோய் காணுகிறது. அந்த நிலையிலும் முகாமிலிருந்து தப்ப கிழவி செய்யும் சாகசத்தைக் கதை விவரிக்கிறது. தன் தகப்பனின் சிதைந்து போன தலையை மண் போட்டு மூடிய குயிலினியின் கைகளுக்குள் இருந்து வீழ்ந்த மண் துகள்களில் துன்பத்தின் மலை எழுந்ததுஎனும் உருவகம் மரணம் எனும் அவலத்தின் உச்சத்தை  அழகியல் கொண்டு எட்ட வைக்கிறது.   

போராளிகளின் பீரங்கிப் படைப்பிரிவில் ஒரு முக்கியப் பொறுப்பாளராக இருந்த இனியவனுக்கும் போராளியாய் யுத்தத்தில் தன்னுடைய ஒரு காலை இழந்து நிற்கும் பரணிக்கும் இடையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக முகிழ்த்து நின்ற காதலின் முடிவு என்னவாயிற்று என்பதை விவரிக்கும் சிறுகதை பரணி (தீராநதி டிசம்பர் 2015).  தோல்வியின் இறுதியில் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த இந்தக் காதலர்கள் மீண்டும் சந்திக்கிற நிலையைக் கதை இப்படி விவரிக்கிறது:

கதவைத் திறந்து வெளியில் வந்த பரணியின் கண்கள் காட்டெருமையின் சிதைந்து போன முகத்தைப் போலச் சிவந்திருந்தது. பாம்புச் சட்டை போல அவள் உடல் முழுக்கப் பரவிக்கிடந்த பொறுக்கும், அவளின் மெலிந்த தோற்றமும் இனியவனை உலுக்கியது....சவக்கிடங்கில் சந்திப்பதைப் போன்ற உணர்வு இனியவனுக்கு. என்னதான் சூரிய ஒளி வந்தாலும் இருண்டுதான் கிடப்பேன் என்கிற பிடிவாதத்தோடு கிடந்தது பரணியின் வீடு. வெளிச்சமற்ற மனிதர்களின் வீடு இருட்டில் கிடப்பதில் துன்பம் மேன்மையடைகிறது. அந்த இருள் தனக்குப் பிரியமான சுபாவத்தோடு இருப்பதைப் போல பரணி நின்று கொண்டிருந்தாள். இருள் பிரியமாக அவளோடு சீவிக்கத் தொடங்கியிருக்கிறது. அது அவளை விட்டுப் பிரியாத பாகமாகப் பரவியிருந்தது.

சுயப் பிரதிநிதித்துவப்படுத்துதல் பற்றிய புரிதல்  நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம்? பிறருக்கு நம்மை நாம் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்? இவை நாம் கடந்த காலத்தைப் பற்றிக் கூறும் கதைகளிலிருந்து தள்ளி வைக்க முடியாதவை. அகரமுதல்வனின் சிறுகதைகளில் தனிநபர் சுய பிரதிநிதித்துவப்படுத்தல் கூட்டு சுய பிரதிநிதித்துவப்படுத்தலோடு மேற்குவிந்து சில நேரங்களில் அதன் மையச் சிக்கலாகி விடுகிறது. தனிநபர் நினைவு கூட்டு முக்கியத்துவத்தை எதிர் கொள்கிறது. சில நேரங்களில் இது முரண்பட்ட நினைவு விவகாரமாக மாறிப் போகிறது

நினைவின் விவகாரம் மற்ற பொது விவகாரங்களிலிருந்தோ அல்லது புரளிகளிளிருந்தோ வேறுபட்டு நிற்கின்றது. இன்னும் முழுதாய் வெளிப்பட்டிராத ஒரு சம்பவத்தின் பின்விளைவு அல்ல இங்கே பணயம் வைக்கப் பட்டிருப்பது. கடந்த காலத்தில் உறுதியாய் நிலைகொண்டிருக்கும் ஆனால், நிகழ்காலத்தில் அதன் பின்விளைவுகள் உணரப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சம்பவத்தின் பொதுப் புரிதலும் அர்த்தப்படுத்துதலும்தான் நினைவின் விவகாரத்தில் இருக்கும் ஒரு பொருளின் சிக்கல். நினைவின் சிக்கல்கள் எல்லாமே பூரணமாய் வளர்ந்து நிற்கும் பொது விவகாரங்கள் ஆகி விடுவதில்லை. ஆனால். அவை எல்லாமே தனிப்பட்ட நினைவுக்கும் கூட்டு நினைவுக்கும் இடையே, ஒரு தனிநபருக்கு நடப்பதற்கும் ஒரு பெரும் குழுவுக்கு நடப்பதற்கும் இடையே ஒரு குறுக்கு வெட்டை ஈடுபடுத்துகின்றன

இதோடு தொடர்புடைய ஒவ்வொரு நாடும் தனக்கேயான நினைவுச் சிக்கல்களைக் கொண்டிருக்கிறது. அப்படியான நினைவுச் சிக்கல்கள் பிற நாடுகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வரலாறு என்பது கடந்த காலத்தில் நடந்தவை என்றாகும் பட்சத்தில் ஒரு காலத்தில் இருந்ததைப் பதிவு செய்து அதை அர்த்தப்படுத்தும் முயற்சியே வரலாற்றை எழுதுவது என்றானால், நிகழ்காலத்தில் வரலாறென்று மிஞ்சுவது நினைவுகள் மட்டுமே. அது தனி நபருக்கானாலும் சரி, ஒரு குழுவுக்கானாலும் சரி. கறாராகப் பேசுவதென்றால் கூட்டு நினைவு என்ற ஒன்று இல்லவே இல்லை. எல்லா நினைவுமே தனிநபர் நினைவுதான். அதுவுமே கூட உருவாக்கப்பட முடியாதது. அந்தத் தனிநபருடனே சேர்ந்து அழிந்து போவது அது. கூட்டு நினைவு என்று சொல்லப்படுவது வெறும் நினைவு வைத்திருப்பது மட்டுமல்ல. மாறாக, இது முக்கியமானது என்று வரையறுக்கப்படுவது. இது எப்படி நடந்தது என்பதன் பின்னணியில் உள்ள கதை இதுதான்.

ஒருவரைப் போலவோ அல்லது ஒருவரிடம் இருப்பதைப் போலவோ இன்னொருவர் அதே போன்ற நினைவுகளை வைத்துக் கொள்வது சாத்தியமில்லை. என்றாலும் நினைவுகள் தொடர்பு கொள்ளத்தக்கவை. அவற்றைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். அவற்றை மடை மாற்றலாம். ஒரு குறிப்பிட்ட நினைவுக் கொத்தை குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையிலான மக்கள் குறிப்பிடத்தகுந்ததென்று கருதுவார்களேயானால் அந்த நினைவுகள் கூட்டு நினைவு உருவாகப் பங்களிப்பைச் செய்கின்றன.

ஒன்றன் வெளிப்பாடு இன்னொன்றோடு ஒரு இணை உறவு கொள்ளத்தக்க விதமாக ஒரு குழுவின் நினைவுக்கும், ஒரு தனிநபரின் நினைவுக்கும் இடையே ஒரு ஒட்டுறவு நிலவுகிறது. பதிந்து வைக்கப்பட்ட தனிநபர் நினைவுகள் எந்த வடிவிலிருந்த போதும் வரலாற்று துப்புத்துலக்குதல்களோடும் அதிகாரபூர்வ நினைவுக்குறிப்புகளோடும் இணையாக நிற்கும். இது போன்ற கடந்த காலத்தை மீள்நினைவாக்கும் முயற்சியால் கூட்டு நினைவு வடிவமைக்கப்படுகிறது. நிகழ்காலத்துக்கு முக்கியமானது என்று கடந்த காலத்து சம்பவம்  ஒன்று வரையறுக்கப்படும் வரையில் அதைப் பற்றிய கூட்டு நினைவு விடாமல் தொடரும். அதுவே மீதமுள்ள நினைவுகளைப் போல் பரிணாம வளர்ச்சி அடையும்.

பத்திரிகைகள் எதிலும் பிரசுரமாகாமல் அவருடைய வலைப்பூவில் வெளியிடப்பட்டிருக்கும் சாகாள்எனும் சிறுகதை போர்க்குற்றங்களின் வக்கிரம் கனவிலும் நினைத்திருக்க முடியாத கேவலங்களைச் சாதாரணமாக்கி விடும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. பாலியல் வன்முறையை சிங்கள ராணுவம் பிரயோகித்த முறையை அப்பட்டமான மொழியில் இக்கதை விவரிக்கிறது. வாசக மனதைத் தேவையில்லாத அருவருப்புக்கு உட்படுத்துவதாக அல்லாமல், போர்க்கைதிகள், அதிலும் குறிப்பாகப் பெண்கள் என்ன மாதிரியான அடக்குமுறைகளுக்கும் அதிகார வெறிக்கும் ஆட்பட வேண்டியிருக்கிறார்கள் என்பதைக் கதை கூச்சமின்றி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இது விவரிக்கப்படும் மொழிநடையின் நேர்த்தி உள்ளடக்கத்தின் அவலத்தை எட்டமுடியா முகடுகளுக்கு உயர்த்திச் செல்கிறது.

இந்தக் காலவெளியிலிருந்து அவளால் மீள முடியவில்லை. கணங்களில் சலிப்பு நிகழ்ந்த பின்னர் விரும்பத்தகாத இருத்தலாக வாழ்க்கை திணறுகிறது. துயரங்களுக்குள் ஒடுங்கி வானத்தைப் பார்க்கிற பறவைக்கு பறத்தலில் ஒரு பயமிருப்பதைப் போல அவளுக்குள்ளும் வாழ்க்கை நடுங்கத் தொடங்கிவிட்டது. புலர்ந்த காலையும், இரவும் அவளுக்கு ஒன்றாகவே நிறம்காட்டியது. பொழுதுகள் தீரத்தீர தன்னையும் தீர்த்துக்கொண்டிருக்கும் உயிரியாய், இருட்டின் விலங்குகள் போடப்பட்டிருக்கும் தனது கைகளை எப்போதேனும் தூக்கி முகம் துடைத்து வலியழிப்பாள். அழிக்க அழிக்கத் தோன்றும் வலியின் சாகாவரம் அவளில் தொற்றியிருந்தது.என்று சாகாளின் கதையைக் கதை சொல்லி சொல்லத் தொடங்குகிறார்.

சிவகாமி கூப்பிய தனது கரங்களுக்குள் வாதைகளின் வாயைக் கட்டிப்போட்டிருந்தாள். உலகிற்கு சொல்லமுடியாத துயரங்களை சித்ரவதைகளை சிறைகளில் சந்தித்த பெண்ணுடல் சிவகாமியினது. போரும் போரின் வெற்றியும் பெண்களின் உடலைத்தான் தீனியாக்கியது எனும் மனங்கசந்த வரிகள் நேரடி அனுபவத்தின் சத்தியத்தில் பிறந்தவை. சிவகாமியின் மூச்சுக்குள் சனங்களின் அவலம் புயல் காற்றின் பாய்க்கப்பலைப் போல திணறியதுஎன்று அவலநிலையின் தீவிரத்தை அகரமுதல்வன் வாசகனுக்கு மடைமாற்றுகிறார். கோழைகளின் வீரம் சித்ரவதைஎனும் அனுபவ நிலையை அவமானம் ஏதுமற்ற மொழியில் வர்ணிக்கிறார் கதைசொல்லி

எவ்வளவோ அசிங்கங்களையும் வக்கிரங்களையும் நேரில் அனுபவித்து விட்ட மனசிடம் நாசூக்கை வலியுறுத்துவது நியாயமாகாது. மனித நாகரீகம் நிர்வாணப்பட்டு நிலைகுலைந்த செய்தியை வரும் தலைமுறைகளுக்கான ஆவணமாக இந்த விவரணைகள் எடுத்துச் சொல்கின்றன. நினைக்கவே கூசும் அநாகரிகச் செயல்களை ராணுவ வலிமை எப்படி இயல்பாகச் செய்கின்றது என்பதை சாகாள்அம்பலப்படுத்துகிறது.    
  
கதை சொல்லும் யுத்திகளில் பொருட்படுத்தத்தக்க புதுமைகளை அகரமுதல்வன் கையாண்டு பார்ப்பதில்லை. வடிவ ரீதியாகவும் தனக்கெனத் தனித்துவம் மிக்க அம்சங்களை அவர் நாடிச் செல்ல முற்படுவதில்லை. தனக்கு இயல்பாகப் பழகி இருக்கிற ஈழத் தமிழ் வட்டாரத்  தமிழைத் தயக்கங்கள் எதுவும் இன்றி அவர் கையாளுகிறார். அவர் கதைகளின் உள்ளடக்கம் அவர் அறிந்த போரின் அவலங்கள்தான். அந்த அவலத்தை அவருக்கே உரிய அழகுணர்ச்சியோடு சொல்ல முற்படுகிறார். அவருடைய முயற்சிக்கு அவருடைய மொழிநடை வெகுவாகக் கை கொடுக்கிறது. தான் கதையாக வெளிப்படுத்த விரும்பும் அனுபவத்தை பூடகங்கள் ஏதுமில்லாத நேரடியான மொழியில் தேவையற்ற விவரங்களை விலக்கி நேர்த்தியாக சொல்லி முடிக்கிறார். அவருடைய அனுபவங்களின் அசல்தன்மை அவர் சொல்லும் விதத்தில் நேர்மையான காட்சியாகி வாசகன் மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அவலமே வாழ்வாகிப் போன ஒரு சந்ததியின் தீனக் குரலாய் அவை நம் மனசாட்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.



கதாபாத்திரப் படைப்பு என்று தனிக்கவனம் கொடுத்து அகரமுதல்வன் பாத்திரங்களை உருவாக்குவதில்லை. யுத்த பூமி அவருக்கு அளித்திருக்கும் அனுபவங்களையும், காட்சிகளையும், மாந்தர்களையும் கற்பனையின் சாயலின்றி அதே நேரத்தில் புனைவுக்கு உண்டான வசீகரத்தோடு அவர் படைக்கிறார். போர்நிலமே அவருடைய பிரதான கதாபாத்திரமாக விளங்குவதை ‘இரண்டாம் லெப்ரினன்ட்’ கதைத் தொகுப்பை வாசிக்கும் பொழுது புரிந்து கொள்ள முடியும்.      
இதுவரை பத்திரிகைகளிலும், இணையத்திலும் வெளியான இவருடைய சிறுகதைகளை இரண்டாம் லெப்ரினன்ட்எனும் தொகுப்பாக தோழமை வெளியீடு பதிப்பித்திருக்கிறது. சிறுகதையுலகில் அகரமுதல்வன் இப்பொழுதுதான் தளர்நடை போடத் தொடங்கியிருக்கிறார். என்ற போதும் இவர் விரைவிலேயே கவனம் பெரும் உயரிய இலக்கியத்தைப் படைக்கும் திறன் மிகுந்தவர் என்பதற்கு இவருடைய நான்கு கவிதைத் தொகுதிகளும் கட்டியம் கூறுகின்றன. 

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்