கிழவி ( சிறுகதை )

குயிலினிக்கு இன்றைக்குத் தான் 24 வயது தொடங்கியிருக்கிறது.          முள்ளிவாய்க்காலில் தாயும் தகப்பனும் ஒரே இடத்தில் குண்டு வீழ்ந்து செத்துப் போகும் போது எஞ்சிய கண்ணீரைப் போலவே குயிலினியும் அம்மம்மாக் கிழவியும் காயங்களற்று தப்பினார்கள். அந்த நாளும் அவளுக்கு பிறந்த நாளாகத் தான் இருந்தது. 

ஏப்ரல் மாதம் 27ம் திகதி பதுங்குகுழியில் தாயையும் தகப்பனையும் புதைக்கிற பொழுது பூமியின் மிக இளமையான துயரம் குயிலினியிடம் இருந்தது. தகப்பனின் சிதைந்து போன தலையை மண் போட்டு மூடிய குயிலினியின் கைகளுக்குள் இருந்து வீழ்ந்த மண் துகள்களில் துன்பத்தின் மலை எழுந்தது. இனிமேல் குண்டு வீழ்ந்தால் எம்மில் இருவரும் மிச்சமில்லாமல் இறந்து போகவேண்டுமென்று கிழவி அழுது சொன்ன வார்த்தைகள் போர்க்க்களத்தின் காற்றில் இழைந்தது.

ஆனால் இருவரும் சாவிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாய் எல்லாவற்றையும் கடக்க நேர்ந்தது. முள்ளிவாய்க்காலில் இராணுவம் மக்களை பேருந்துகளில் ஏற்றிய பொழுது கிழவி குயிலினியைப் பிடித்திருந்த பிடியின் இறுக்கம் இப்பொழுதும் அவளின் கைகளில் தெரியும். முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காலங்களில் குயிலினிக்கு அம்மை போட்டிருந்தது. தரப்பால் கூடாரங்களின் வெக்கையில் அம்மைப் புண்கள் தசைகளை கழட்டிக் கொண்டேயிருந்தது. முகாமில் அம்மை நோய் வந்து நிறையைக் குழந்தைகள் இறந்துகொண்டேயிருந்தது கிழவிக்கு அச்சத்தைத் தந்தது.

தரப்பால் கூடாரத்துக்குள் குயிலினியைப் போல குழந்தைகளும் பெண் பிள்ளைகளும் நோயாளிகளாக படுத்திருந்தார்கள். வெயில் கூடாரங்களின் மீது கொதித்துக் கொண்டேயிருந்தது. குயிலினியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல இராணுவம் அனுமதித்தது. அம்மையின் உக்கிரம் குயிலினியின் உடலை உதிர்த்தது. எல்லாத் தர்மங்களும் பொருளற்ற பூமியில் சூரியன் ஏன் இவ்வளவு தகிக்க வேண்டும். குயிலினி அழுதாள். அவளின் கண்களில் இருந்து நீண்ட தொலைவுக்கு அப்பால் கேட்கவேண்டிய அழுகையின் சத்தமிருந்தும் கண்ணீர் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.

அழாதே குயிலி, அம்மாளாச்சி ஏன் எங்களை இப்பிடி சோதிக்கிறா. எங்கட பிள்ளையள் என்ன குற்றம் செய்தவே. நீ அழாதே. நாம் அழுதும் இறக்கவேண்டியவர்களாய் இருக்கிறோம். மகளே நீ கண்ணீர் விடாதே. இப்படித்தான் நாம் வாழவேண்டும் என்றால், வெகு விரைவில் செத்துவிடுவோம் என்று குயிலினியின் தலைமாட்டில் இருந்தது கிழவி சொன்னாள்.

அவளை வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போதே அவள் இறந்துவிடுவாள் என கூடாரங்களுக்குள் பொசுங்கிக் கொண்டிருந்த மக்கள் கதைத்துக்கொண்டார்கள். கண்ணீரை உதிர்த்தார்கள். காருண்யம் மீது நம்பிக்கையற்ற மக்கள் வெறித்த கண்களால் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கிழவி எல்லோரையும் ஒரு தடவை வாகனத்துக்குள் ஏறிய பின் பார்த்தாள்.

நீ கவலைப்படாத. பேத்திக்கு ஒண்டுக்கும் நடக்காது என்று கிழவிக்கு ஒருவர் சொன்னார். கிழவி மிரண்டுபோயிருந்தாள். வாகனம் முகாமை விட்டு வெளியேறும் வரை கிழவி எதுவும் கதைக்கவில்லை. குயிலினியைப் போல எத்தனையோ குழந்தைகள் இன்னும் முகாமுக்குள் அம்மை போட்டு இறந்து கொண்டேயிருந்தார்கள். ஆஸ்பத்திரிக்கு அனுமதி வழங்கப்பட்டதில் கிழவிக்கு ஆச்சரியமில்லை. குயிலினியின் அம்மாவோ அப்பாவோ இயக்கத்தில் இருந்திருந்தால் அனுமதி வழங்கப்பட்டிருக்காது. 

கிழவியும் குயிலினியும் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் இறக்கப்பட்டார்கள். ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒரு நிமிடம் நிற்பதற்கு கூட இடமில்லாது மக்கள் நோயாளிகளாக்கப்பட்டிருந்தார்கள். குயிலினி ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவர்கள் சொன்னார்கள். கிழவி குயிலினியின் அருகில்படுத்திருந்தாள். ஆஸ்பத்திரியின் தாழ்ந்த கூரையின் விளிம்பில் நிலவின் ஒளிபட்டது. மருந்தின் நெடியில் பலர் ஓங்காளித்துச் சத்தி எடுத்தார்கள். ஆஸ்பத்திரியின் கழிவு வாய்க்காலுக்கு அருகிலேயே கந்தல் சீலையைப் போர்த்தபடி மக்கள் படுத்திருந்தார்கள். இரவு பிடிவாதமான பதற்றத்தோடு நீண்டது.

இராணுவத்தின் சப்பாத்துக் கால்கள் படுத்திருந்தவர்களுக்கிடையில் நடந்து கொண்டிருந்தது. நோயாளிகளாய் கண்களை மூடிய சிலர் சடலங்களாய் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அழுகையும் கதறலும் மன்றாட்டங்களோடு குரலெடுத்தது. கிழவி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டேயிருந்தாள். ஆஸ்பத்திரியில் ஒளிர்ந்த மின்குமிழ்களின் வெளிச்சத்தில் எல்லாக் காட்சிகளும் விசித்திரமாய் தெரிந்தது. எல்லோரும் மரணித்துக்கொண்டிருக்கும் நோயாளிகள் என முகங்களை மூடிக் கொண்டே மூச்சு விட்டார்கள்.   

கிழவிக்கு மூத்திரம் வந்தும் எழும்பிச் செல்லவில்லை. அவளுக்கு குயிலினியை தனியே விட்டுச் செல்ல அவ்வளவு பயமாகவிருந்தது. எல்லோருக்குள்ளும் இருக்கும் மவுனம் எல்லோரையும் அச்சுறுத்தியது. கிழவி மூத்திரத்தை அடக்கி வயிறு நோகத்தொடங்கியது. நேரம் நள்ளிரவு இரண்டிருந்திருக்கும் பக்கத்தில் நித்திரையில் இருந்து கண்விழித்த ஒரு பிள்ளையிடம் சொல்லிவிட்டுச் சென்றாள். கிழவி கழிவறைக்கு நடந்து போகும் போதே களைத்துப்போயிருந்தாள். நடந்து போகும் போதே முத்திரத்தை சட்டையோடு பெய்ததை அவளால் நம்பமுடியவில்லை. அவள் கழிவறைக்குள் அழுதாள். தேங்கி நின்ற அசுத்தமான கழிவறையில் கிழவி கண்ணீரை மட்டும் சேர்த்தாள். 

கழிவறையின் அடர்த்தியான துர்நாற்றத்தில் இருந்து மீண்ட கிழவி குயிலினியை நோக்கி நடந்தாள். குயிலினி கண் விழித்து தண்ணீர் கேட்டாள். கிழவி தனது நடுங்கும் கரங்களால் அவளின் வாய்க்குள் தண்ணீரை ஊற்றினாள். குயிலினியின் உடலில் அம்மை பெருகிக்கொண்டேயிருந்தது கிழவியை வருத்தியது.
காலையில் குயிலினி கண் விழித்துப் பார்க்கிற பொழுது கிழவி அருகில் இல்லை. குயிலினி சுற்றுமுற்றும் காயங்களோடு உதிரும் தனது உடலைத் திருப்பி பார்த்தாள். கிழவி கையில் இரண்டு வாழைப்பழங்களோடு நடந்து வருவதைப் பார்த்தாள். குயிலினியின் ஒரு கண்ணுக்கு மட்டுமே கிழவி நடந்து வருவதைப் போல இருந்தது. அவள் தனது கண்களை ஒரு முறை மூடி மீண்டும் நடந்து வரும் கிழவியைப் பார்த்தாள். ஒரு கண்ணில் மட்டுமே கிழவி நடந்து வருவது தெரிந்தது. அவள் மீண்டும் கண்களை மூடி தனக்கருகில் நிண்ட ஆர்மிக்காரனைப் பார்த்தாள்.

ஒரு கண்ணுக்கு மட்டுமே தெரிந்தான். தனக்கருகில் கிடந்த இன்னொரு பிள்ளையைப் பார்த்தாள். ஒரு கண்ணுக்கு மட்டுமே தெரிந்தாள். குயிலினி தனது ஒரு கண்ணின் பார்வை பறி போனதை கிழவியிடம் சொல்லவில்லை. இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. குயிலினியின் அம்மைக் காயங்கள் வெகுவாக காயத்தொடங்கியிருந்தது. கிழவி இரவு நேரங்களில் அருகிலிருக்கும் பிள்ளையிடம் குயிலினியை பார்க்கச் சொல்லிவிட்டு எங்கோ எழும்பிப் போவதை இரண்டாவது நாளில் இருந்து செய்யத்தொடங்கினாள். குயிலினி தனது பார்வை போன கண்ணை நினைத்து அழுவாள். நின்று நெடுநேரமான ஊளைச் சத்தம் அவளுக்கு கேட்டபடியே இருக்கும். தனது கண்ணுக்கு தெரியும் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கும் காவற்காரன் போல குயிலினி எண்ணத்தொடங்கினாள். 

கவனமற்று வீசிக் கொண்டிருக்கும் இரவுக் காற்றில் இனமறியாத துயரத்தை இழக்க முனைந்தாள். வானத்திலிருந்து குவியும் இருளிடம் எல்லாவற்றையும் எண்ணிப் பிரார்த்தித்தாள்.

அடுத்த நாள் புலர்ந்த பொழுதில் கிழவி இரண்டு வாழைப்பழங்களோடு நடந்து வருவதைக் கண்ட குயிலினிக்கு எந்த துயரிலும் பார்வை பறிபோனதை தான் சொல்லக்கூடாது என எண்ணினாள். அருகில் வந்த கிழவியின் கையில் ஒரு கைபேசி இருப்பதை குயிலினி தனது ஒற்றைக்கண்ணால் கண்டாள். கிழவி தனது தலைமாட்டில் கிடந்த பையுக்குள் அதனை வைத்தாள். கிழவியின் எண்ணங்கள் தொலைவில் குவிந்தன. குயிலினி எங்கால உங்களுக்கு போன் என்று கேட்டாள். கிழவி ஒரு கொலையை மறைக்கும் பாதகனைப் போல கண்களை ஆட்டி ஒன்றும் கேட்காதே என்று குயிலினிக்கு சைகை செய்தாள்.
புரியாதவை குறித்து அச்சங்கள் பிறக்கும். குயிலினியைக் கிழவி கழிவறைக்கு கூட்டிக் கொண்டு போகும் போதே இன்றைக்கு இரவு நாங்கள் தப்பி ஓடவேண்டும் குயிலி என்று யாருக்கும் சந்தேகம் வராதபடி அழுதுகொண்டே சொன்னாள்.

அவளுக்கு அதிசயம் நிகழ்வதைப் போலவிருந்தது. தப்பித்துவிடுதல் என்கிற உணர்ச்சியை குயிலினி முகத்தில் காட்டாமல்  
எப்பிடி அம்மம்மா? இவ்வளவு ஆர்மிக்காரர்களைத் தாண்டி நாங்கள் ஆஸ்பத்திரியை விட்டு போக முடியுமா? அப்படி வெளியில் போயும் நாங்கள் எங்க போறது? வவுனியாவில எங்களுக்கு ஆர் இருக்கினம்.?
மகளே! நாம் தப்பித்துவிடவேண்டும் என்று இன்றைக்கு முயல்கிறோம். நாம் இன்னும் தப்பிக்கவில்லை. எத்தனை நாள் தான் இந்த வதைகளை எம்மால் பொறுக்க முடியும். இன்றிரவு நாம் கொடுமையில் இருந்து தப்பிக்க வேண்டும் தவறினால் கொல்லப்படவேண்டும். நாம் அழுந்திச் சாக என்ன பாவம் செய்தவர்கள். இந்த வாழ்க்கை அர்த்தமற்ற மூச்சுக்களால் நிரம்பியவை. குயிலி நாம் உடனேயே தப்பிக்கவேண்டும் அல்லது இறந்துவிடவேண்டும். சாவதற்கு கவலை கொள்ளாதே மகளே. நாம் தப்பிக்கவேண்டும்.

குயிலினியும் கிழவியும் கழிவறைக்குள் சென்று மீண்டும் படுக்கைக்குத் திரும்பினார்கள். எதுவும் சொல்லப்படாத கேட்கமுடியாத பகலாக இருவரும் அருகருகே முகங்களை பார்த்தபடிக்கு படுத்துக்கொண்டார்கள். குயிலினி தனது கண்ணால் கிழவியைப் பார்த்தாள். கிழவியின் முகத்தில் அச்சம் முரட்டுக் கரம் கொண்டு குத்தியபடியே இருந்தது. கிழவி குயிலினியைப் பார்த்துச் சிரித்தாள். அந்த அமைதியை எவராலும் குலைக்கமுடியவில்லை. நீளும் பகல் மீது கிழவிக்கு பயங்கர எரிச்சல் தொற்றிற்று. கிழவி எப்போதுமில்லாமல் தன்னை இறுக்கமான சுபாவக்காரியாக நினைத்துக்கொண்டாள்.

குயிலினி எழுந்தாள், நான் கொஞ்சம் நடந்து விட்டு வருகிறேன் என்றாள்.
இல்லை போகவேண்டாம் என்று மறுத்தாள் கிழவி. நீ நடந்து திரிவதற்கு இங்கு பாதைகள் எதுவுமில்லை. கிடந்து நித்திரை கொள் என்று கண்டித்தாள்.

இந்த நாளின் பகல் மீது குயிலினிக்கு கசப்பு எழுந்தது. கிழவி சொன்ன தப்பித்தல் எப்படி என்கிற பயம், அதனை நிகழ்த்தவேண்டிய பதற்றம் எல்லாம் இந்தப் பகலுக்குள் சுமையாகிக்கொண்டேயிருந்தது. தனது பார்வை பறி போனதை கிழவியிடம் சொல்லாத மனச்சோர்வும் குயிலினியின் மனத்தை வருத்தியது. கிழவி நித்திரையாகிக் கொண்டிருந்தாள். 

அவளின் கண்கள் ஆலமர நிழலைப் போல குளிர்ந்திருந்தது. நேரம் மெல்லக் கழிந்து சென்றது. பகலின் அதிவிநோதமான நீளம் குயிலினிக்கு கலக்கம் தந்தது. தனது பார்வை பறிபோன கண்ணை மூடி மூடித் திறந்தாள். இழந்தவைகளை பெற்றுக்கொள்ளத் துடிக்கும் அவா அவளின் கண்ணில் இருந்தது.

அந்தி வானம் பூமியை நெருங்கியிருந்தது. பகல் கடமைகளை முடித்த தாதிகள் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டனர். இரவுக்கான காட்சிக்கு ஆஸ்பத்திரி தயாராகிக்கொண்டிருந்தது. மாலையில் வழங்கப்படும் தேநீர் மிகத் தாமதமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. கிழவி கண்களை விழித்த பொழுது நேரம் ஆறு அரையைத் தாண்டியிருந்தது. குயிலினி கண் விழித்த கிழவியை பார்த்துக் கொண்டே அழுதாள்.
ஏன் பிள்ளை அழுகிறாய். 

அதெல்லாம் மாறிடும். இப்ப வந்ததை விட சுகமாய் தானே இருக்கு. நீ பயப்பிடாதே. சுகமாய் போயிடலாம் அழாதே. சுகமாய் போயிடலாம் அழாதே என்று இரண்டு தடவைகள் சொல்லி குயிலினியை அழுத்தினாள். கிழவி குயிலினியை முகம் கழுவ கூட்டிக் கொண்டு போனாள்.
உனது இழிவான பயத்தை அழித்து விடு மகளே என்று கிழவி கொஞ்சம் அதிகாரமாக சொன்னாள். 

கிழவியின் சொற்கள் இன்னும் காயாமல் கிடக்கும்  அம்மைத் தழும்புகள் மீது ஊசிகள் பொழிந்ததைப் போன்று குயிலினியைத் துன்புறுத்தியது. பாழ்பட்டுப் போன விதியின் கண்களைப் போல குயிலினியின் பார்வையற்ற கண் துடித்தது.

ஆஸ்பத்திரியின் சுவர்களில் இரவு படிந்திருந்தது. தாழ்வான கூரையின் விளிம்புகளையும் இரவு மூடியிருந்தது. இன்னும் அதியற்புதமான இருட்டு கிழவிக்கு வேண்டும் போலவிருந்தது. குயிலினியின் முகத்தில் சோகத்தோற்றம் அழிந்து பதற்றம் மோதிக்கொண்டேயிருந்தது. கிழவி அவளது தலையைத் தடவிக் கொண்டிருக்கிறாள். யாருக்கும் சந்தேகம் எழாதபடிக்கு கிழவியும் அவளோடு கூடவே படுத்திருந்தாள்.
குயிலினியின் நடுக்கம் அவளைப் போர்த்தியிருந்த போர்வைக்கு வெளியிலும் பரவிற்று. உயிரோடு வதைக்கப்படும் ஒரு பிராணியைப் போல கிழவியின் கண்களுக்குள் குயிலினி நீண்டாள். இரவின் நெடுமூச்சு நீள்கிறது. தமக்குத் தூரத்தில் நின்ற இராணுவம் கடமை முடித்து போக இன்னொருவன் வந்து நிற்பதை கிழவி பார்த்துவிடுகிறாள். 

நேரம் ஒன்றைத் தாண்டி விட்டது. கிழவி மெதுவாக குயிலினியை முன்னுக்கு நடந்து போகும் படி சொல்லுகிறாள். குயிலினி எழும்பி நோய்மையின் நடையோடு கிழவி சொன்ன இடத்திற்கு போகத்தொடங்கினாள். கிழவி அவள் போவதே தெரியாமல் படுப்பதைப் போல திரும்பிப்படுக்கிறாள். குயிலினி நலமடையமுடியாத ஒருத்தியாய் நடக்கிறாள். தலைமாட்டில் கிடந்த பையில் இருந்து கைபேசியை எடுத்து தனது மார்ச்சட்டைக்குள் படுத்தபடியே வைத்தாள். 

கிழவி வழக்கம் போல தனது நேரத்திற்கு எழுந்து செல்கிறாள்.  கிழவி சொன்ன இடத்தில் குயிலினி போய் படுத்திருந்தாள். கிழவி வந்தவுடன் அப்படியே எந்த அசைவுகளும் இல்லாமல் அவளோடு படுத்துவிட்டாள். 
குயிலினி அழவில்லை,ஆனால் அவளின் நாடி பயத்தில் நடுங்குகிறது. கிழவி கண்டிப்புடன் எல்லாவற்றையும் கடக்கவேண்டும் என்று மீண்டும் குயிலினுக்குச் சொன்னாள். விபரீதம் விழித்திருப்பதைப் போல குயிலினி இருந்தாள்.

இதோ பார் மகளே! நமது வாழ்வு மிகவும் வேடிக்கைகள் நிரம்பியவை. அவற்றை புரிந்து கொள்ளவேண்டும். நாம் நீசத்தனங்கள் கொண்டவர்களிடம் சிக்குப்பட்டு விட்டோம். நாம் துன்பங்களுக்கு மதிப்புக்கொடுக்க முடியாது. அவற்றை எம் கால் கொண்டு மிதிக்கவேண்டும். எல்லாம் இழந்துவிட்டோம் எம்மிடம் எல்லாமே பிடுங்கப்பட்டுவிட்டது. இந்த இரவில் சந்திக்கப்போகும் சில மணித்தியாலங்களை நாம் திறனுள்ளவையாக மாற்றவேண்டும்.
துயரத்தை நாம் பழுதுபார்க்கக் கூடாது அவற்றை முற்றாக நீக்க வேண்டும். எமது மானத்தைக் காப்பாற்றுவதற்கு மரணத்தை நேசிக்கவேண்டும். அதோ அந்த ஆர்மிக்காரன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வேறொரு திசை நோக்கி சென்று விடுவான். அவனை நான் ஏமாற்றிவிட்டேன். அவன் இன்னும் சொற்ப நிமிடங்களில் வேறொரு இடத்திற்கு போய்விடுவான்.        

நாம் அவனைக் கடந்து விட்டால்  வாயிற் கதவை எந்த விசாரிப்புக்கள் இல்லாமல் கடந்து விடலாம். வாயிற்கதவுக்கு செல்லும் போது நீ இந்தப் போர்வைகளை எறிந்து விட்டு துணிச்சலாக நடந்து செல். யாருக்கும் சந்தேகம் என்பதை உண்டுபண்ணமுடியாத அளவுக்கு உனது நடை அதில் இருக்கவேண்டும் மகளே நோயுற்ற உனது உடலை நீ விடுதலை செய்.
கிழவி தனது மார்ச்சட்டைக்குள் இருந்து கைபேசியை எடுத்து தொடர்பு கொண்டாள். அந்த ஆர்மிக்காரன் போன் எடுப்பதை குயிலினி தனது ஒற்றைக் கண்ணால் பார்த்தாள். கிழவி தொடர்பை துண்டித்தாள். ஆர்மிக்காரன் மிகவேமாக அந்த இடத்தில இருந்து மறைந்தான். கிழவி சொன்னது போலவே நடப்பது குயிலினிக்கு ஒரு துணிச்சலைத் தந்தது. அவளிடம் நிறையக் கேள்விகள் கிழவியிடம் கேட்பதற்கு இருந்தது. ஆனால் காலமிதுவில்லை.

போ குயிலி... போ என்று பாட்டி சொன்னாள். பாட்டி அமைதியாக கட்டளையிட்டாள். குயிலினி இரவுக்குள்ளால் நடந்தாள். அலைக்கழிக்கப்பட்ட வாழ்வின் மீது நடந்தாள். கிழவி அவள் பின்னே அடியெடுத்து வைத்தாள். கிழவியின் மார்புச் சட்டைக்குள் போன் அதிர்ந்தது. கிழவி எடுத்து துண்டித்தாள். மிகவேகமாக  குயிலினியும் கிழவியும் அந்த இடத்தைத் தாண்டினார்கள். குயிலினிக்கு நம்பிக்கை செறிந்திருந்தது. பொது நோயாளிகள் நடமாடும் இடத்திற்கு வந்துவிட்டதை கிழவியிடம் குயிலினி தான் சொன்னாள். நீ போர்வையை உன்னிடமிருந்து நீக்கு. அதோ அந்த வாயிலை நோக்கி மிகத் துணிச்சலாக நடந்து செல்.

இரவின் கரு நிழல்கள் கிழவியின் கண்களில் பட்டுச் சிதைந்தன. குயிலினி நடந்தாள். அச்சம் நீங்கிய நிதானம் அவளின் ஒவ்வொரு அடியிலும் இருந்தது. அவள் ஆஸ்பத்திரியின் வாயிலைக் கடந்து வெளியில் போகிற பொழுது கிழவி முன்னோக்கி நடக்கத் தொடங்கினாள். எல்லாம் மூன்று நிமிடங்களுக்குள் நடந்து முடிந்தவையாக கிழவி மாற்றிக் காட்டினாள். வெளியில் போனவுடன் கிழவியை கூட்டிச் செல்ல நின்ற ஒரு நடுத்தர வயதான ஆண் இருவரையும் தனது வீட்டிற்கு கூட்டிச் சென்றார்.

குயிலி இது உனது மாமா. உனது அம்மாவின் தம்பி. நீ பார்த்திருக்கவாய்ப்பில்லை மகளே! என்று குயிலியை கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள் கிழவி. வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் குயிலினியை சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் துயரத்தை தொட்டுப் பார்க்க விரும்பியவர்களைப் போல அம்மைத் தளும்பகளோடு இருந்த அவளின் கரங்களைப் பற்றினார்கள். குயிலினியின் களைத்துப் போன கண்கள் நித்திரையில் மூடியது.

கிழவியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரில் சூரியன் மினுங்கிய காலையைக் கிழவியே பார்த்து மகிழ்ந்தாள். குயிலினியை காப்பாற்றிவிட்டேன் என்ற நிம்மதியில் கண்ணீர் தழுதழுத்தது. தனக்கு உதவிய தாதியை நினைத்து வீசும் காற்றில் கை நீட்டிக் கும்பிட்டாள். இருவரைப் போல எத்தனையோ பேரைத் தப்ப வைத்துக் காப்பாற்றியதாக தாதி சொன்னதை குயிலினியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் கிழவி.  

மாமா காலையில் கொண்டு போய் வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து தாதியிடம் கைபேசியைக் கொடுத்துவிட்டு வந்ததாக கிழவி சொல்லிக் கொண்டிருக்க நீண்ட பகல் கழன்று போக அந்திப்பொழுது நெருங்கும் வானத்தில் வெண்மேகம் காற்றில் கரைவதைப் போல காணாமல் ஆகியது. மேகத்தின் கீழே சிறகுகளை விரித்துப்  பார்வையில் கடந்த பறவைகள் காய்ச்சலில் வெளிறிப்போய் இருக்கும் குயிலினியின் கண்ணுக்குள் அடைந்தன. 

சாதுவாக வீசும் குளிர்காற்று அவளின் உடலை நடுக்க தனது விரல்களை மடித்து நெட்டி முறித்தாள்.  ஒரு விதமாய் தனது உடல் விதிர் விதிர்த்து நடுங்கியதை அவளால் உணரமுடிந்தது. தன்னை இறுக்கமாக போர்வையால் மூடியபடி மீண்டும் முற்றத்துக் கட்டிலில் சரிந்துபடுத்த குயிலினியை அம்மம்மா தட்டியெழுப்பவில்லை. சுருக்கங்கள் கிடையாத கிழவியின் முகத்தில் எவரிடமும் சொல்ல முடியாத துக்கம்.

கிழவிக்கு துணையாக குயிலினியும் குயிலினிக்கு துணையாக கிழவியுமென விதிக்கப்பட்ட வாழ்க்கையின் அசைவு விரக்திகளால் மூடியிருந்தது. பூமி இருளத்தொடங்கியதும் நிசப்தம் முதுபெரும் கலையைப் போலச் சாய்ந்தது. ஒதுக்கப்பட்ட வெளியில் குளிர் காற்று சுழலாகத்  தோன்றியது. குயிலினியின் உடலை ஈரச் சீலையால் துடைத்தபடி கதறியழவேண்டுமென்கிற மூச்சை உள்ளிழுத்து விம்மிய கிழவியின் ஆத்மாவில் கலக்கம்.

மகளே! நாம் இன்னும் கொல்லப்படவில்லை.


நன்றி 
கணையாழி 
2016 ஏப்ரல் 

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி