மிஞ்சியிருப்பவர்களையும் பலியிடும் சம்பந்தனின் சமஸ்டி.


“பனையேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதை”யாக எம் மக்களின் அவலத்துக்கு நீதி கிடையாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் ஒத்த மனம் கொண்ட ஒத்த தமிழின    எதிர்ப்புக் கொண்டவர்களாக வரலாறு எங்கும் இருந்ததைப் போல           இன்றைய அரசும் இருந்து வருகிறது.

கடந்த காலத்தில்  “சமாதானத்துக்கான வெள்ளைப் புறா“ என்று சந்திரிக்கா ஏற்படுத்திய பிம்பத்தைப் போல “நல்லிணக்க அரசு” என மைத்திரி –ரணில் அரசும் பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்கள அரசு இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதியைத் தந்துவிடுமென நம்புகிற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லிணக்க அரசென அழைக்கப்படும் மைத்திரி –ரணில் அரசை சர்வதேச சமூகத்திடம் இருந்து காப்பாற்றி வருகிறது.

இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஒப்ப அவர்களுக்கான நீதிக்காய் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலத்திலும் இயங்கியது கிடையாது. அப்பாவி மக்களாய் கொல்லப்பட்டும் சித்ரவதைக்கு உள்ளாகியும் வாழ்வின் படு துன்பமான கணங்களோடு வாழ்ந்துவரும் மக்களிடம் கலந்தாலோசித்து எந்தவொரு அரசியல் முடிவுகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் எட்டப்படுவது கிடையாது.

மக்களாகிய நாம் முள்ளிவாய்க்காலில் எதிரிகளின் கால்களில் கொடும் விதியால் ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களாய் ஆக்கப்பட்டிருக்கிறோம்.  நாம் நீதிக்காய் வாய் திறக்க முடியாத அளவுக்கு நசுக்கப்பட்டிருக்கிறோம். பிணங்களை கடல் முழுதும் நிரப்பி இரத்தத்தால் எமது இராணுவத் தோல்வியை அடைந்தோம்.
எமது இலட்சியம் தாயக விடுதலையே தவிர சிங்கள ஆட்சியாளர்கள் பிச்சை யிடும் சமஷ்டி தீர்வல்ல.

சமஸ்டியை தனது அரசியல் வியூகத்தால் தமிழர்களுக்கு பெற்று தருவதைப் போல பாவனை செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமஷ்டி மூலம் நீதிக்காய் போராடும் தமிழ் மக்களை பலியிடப்போகும் முறையற்ற சமஸ்டியை பரிந்துரை செய்ய எத்தனித்துள்ளார். நாம் எதிரிகளின் கால்களில் மட்டுமல்ல எம்மவர்களின் கால்களிலும் முள்ளிவாய்க்கால் நிலத்தில் காவு கொடுக்கப்பட்டிருக்கிறோம். தந்தை செல்வா முன் வைத்த சமஸ்டிக்கும் சம்பந்தன் முன்வைக்கும் சமஸ்டிக்கும் கால ரீதியாக அரசியல் ரீதியாக நிலைப்பாடுகள் சார்ந்து எத்தனையோ வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஒரு இனப்படுகொலைக்கு பின்னான இத்தனையாண்டுகளில் இவ்வளவு மோசமான அரசியலையும் அநாகரிகமான தீர்வையும் வேறு எந்த இனமும் அடைவதற்கு முனையாது. இத்தனையாண்டு கால விடுதலைப் போராட்டத்தில் இருந்த எமது இனத்தில் அரசியல் செறிவுடைய கல்வியலாளர்கள் இருந்த அளவை பார்க்கிலும் ஒப்பீட்டளவில் அரசியல் அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதே.

அரசியல் செயற்பாடுகளைத் தாண்டி அது சாத்தியங்கள் மற்றும் யதார்த்தங்களுடனான வியூகங்களை வகுக்கவல்ல திறன் மிக்க சிந்தனைகளிலும் தங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்பான இத்தனையாண்டு காலத்தில் பொதுவாக்கெடுப்பு குறித்து நமது அரசியலாளர்கள்,அறிஞர்கள்,கல்வியாலளர்கள் என நீளும் சமூக அடையாளங்களோடு வாழ்கிற எத்தனை பேர் குரல் கொடுத்திருக்கிறோம்.

நாம் உலகின் இனப்படுகொலை வரலாற்றில் கொண்டிருந்த சனத்தொகையில் அதிகமாகக் கொல்லப்பட்டிருக்கும் ஒரு இனமாக 21ம் நூற்றாண்டில் வாழத் தலைப்பட்டிருக்கிறோம். உலகம் முழுதும் பரந்து வாழ்கிற தமிழீழர்கள் எத்தனை பேர் இது குறித்து அரசியல் ரீதியாக பொருள்கொள்ளும் படி உரையாடியிருக்கிறோம்.? நாம் கூட்டாக கொன்றொழிக்கபட்ட ஒரு இனத்தின் எச்சமாக இருந்து வருகிறோம். நாம் அரசியலை புறக்கணிக்க முடியாதவர்கள்.

எம்மிலிருந்து அமைப்பு ரீதியான மனோபாவங்களைக் களைந்து ஒட்டுமொத்த இனத்தின் நீதிக்காய் போராடவேண்டும் என்கிற மனோநிலைக்கு நம் அரசியல் பண்பு மாறவேண்டியிருக்கிறது. “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை” எனும் இந்தச் சொல்லாடல் எமது அரசியல் சொல்லாடல். நீதிக்கான முத்திரை. எங்கள் கைகளில் நீதியும் பிணங்களும் கண்ணீரும் நிரம்பிக் கிடக்கிறது.

தாயகத்தில் அரசியல் அடையாளமாக இருக்கும் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மரபு ரீதியான மிதவாத அமைப்பு. அது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் செயற்பட்ட தன்மையில் இப்போது இயங்குவதில்லை.

ஒரு பிரமிக்கத்தக்க விடுதலைப் போராட்டத்தின் பளுவைச் சுமந்த மக்களின் கருத்தை எள்ளளவும் மதிக்காத செவிமடுக்காத யுத்தத்தின் மயிரளவு பளுவைக் கூடச் சுமக்காத சம்பந்தனும் சுமந்திரனும் மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதை மிஞ்சியிருக்கும் நாம் வேடிக்கை பார்ப்பதுவும் இனப்படுகொலைக்கு நிகரானது அன்றி வேறெதுவுமாயில்லை.

அண்மையில் மன்னாரில் நிகழ்ந்த கூட்டத்தில் சம்பந்தன் தாம் முன் வைக்கப்போகும் சமஷ்டி ஒஸ்திரியாவில் உள்ள சமஷ்டி என்று குறிப்பிட்டுள்ளார். ஒஸ்திரியாவின் சமஷ்டியை சம்பந்தன் அறிந்திருக்கிறாரா? அல்லது சுமந்திரன் அறிந்திருகிறாரா ? சமஸ்டி என்கிற ஒரு ஏமாற்றும் வித்தையை சம்பந்தன் தமிழ் மக்களின் பிணங்கள் மீது காட்டுகிறார்.

சிங்கள ஆட்சியாளர்களின் தமிழ் முகமாக சம்பந்தன் உருப்பெற்று நீண்ட காலமாகி விட்டது. ஒஸ்திரியாவில் உள்ளது பெயரளவில் சமஸ்டி என்றாலும் கூட அதற்கு எந்தவித அதிகாரங்களும் கிடையாது.

சிங்கள ராஜதந்திரத்தின் அனைத்து படுகுழிகளிலும் தமது அரசியல் நகர்வுகளின் மூலம் மிஞ்சியிருக்கும் தமிழர்களின் வாழ்வை புதைக்க எண்ணியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் ரீதியான தன்மைகளோடு தமிழீழர்கள் கேள்வி கேட்கவேண்டும்.

இந்த வாக்கியத்தின் மூலம் இந்தக் கட்டுரையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானது எனும் முடிவுக்கு வருவது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் சம்பந்தன் முன் வைக்கப் போகும் சமஷ்டி யாருக்கானது. இனப்படுகொலையைச் சந்தித்த மக்களுக்கானதா? இனப்படுகொலையைச் செய்த சிங்கள இனத்தின் ஆசைக்கானதா?

இறுதி அர்த்தத்தில் நாம் பூரண அரசியல் பண்புகள் கொண்ட சிந்தனைகளின் ஊடாக புலம்பெயர் நாடுகளில் அமைப்பு பகை முரண்களை களைந்து, ஒட்டுமொத்த இனத்தின் மீட்சிக்காக தாயகத்தில் அல்லலுறும் போரின் யுகப் பளுவை தூக்கிச் சுமக்கும் மக்களுக்காய் நீதிக்காய் பொதுவாக்கெடுப்பு ஒன்றே தீர்வென உழைப்பது அது தொடர்பாக மேற்கத்தைய மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதை ஆரம்பிக்கவேண்டும்.

அல்லாது போனால் நாம் இன்னொரு தடவையும் அரசியல் ரீதியாக கொல்லப்படும் மனிதர்களாய் ஆகிவிடுவது உறுதியாகிவிடும்.    

- ஆகஸ்ட் முகடு இதழில் வெளியான கட்டுரை

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி