குற்றங்கள் பற்றிய வரைபடம் -1


நான் கூப்பிட்டும் நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள், நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை பைபிள்

இப்போது ஈழத்தில் பிரச்சனையில்லை தானே?. புலிகளின் மாவீரர்  நாளைக்கூட அனுட்டிப்பதற்கு இலங்கையின் நல்லிணக்க அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. முன்னைய அரசிலும் பார்க்க இப்போதைய அரசு சிலோனில் உள்ள தமிழர்களுக்கு சுதந்திரம் வழங்குகிறது தானே? இல்லையா?

இந்தக் கேள்விகளை நான் தமிழ்நாட்டில் எதிர்கொண்டபடியேயிருக்கிறேன். என்னோடு கைலாகு செய்துகொண்டதன் பின்னர் கத்தியைச் செருகுவதைப் போல சில தமிழக சகோதரர்கள் இவ்வாறு கேட்பார்கள். அவர்களின் அரசியல் புரிதல் சார்ந்தபிரச்சனையில் எழும்புகிற கேள்விகள் என்றாலும்,அது என்னைப் பொறுத்தளவில் ஆபத்தானது. இந்த மனநிலையை, அல்லது இந்தத் தோற்றம் யாரால் காண்பிக்கப்பட்டு கட்டமைக்கப்படுகிறது என்று ஆராய்ந்து செயற்படவேண்டிய தேவை ஈழத்தமிழர்களிடம் மட்டுமல்ல விடுதலை விரும்பிகள் அனைவரிடமும் இருக்கின்றது.

கடந்த மாவீரர் தினம் கண்ணீரின் ஆர்ப்பரிப்பில், கல்லறைகளை இனம் கண்ட தாய்மாரின் கருவறைகள் சரிந்தழுது முத்தமிட்ட சிலிர்ப்பான தருணங்களை எத்தனையோ ஆண்டுகளுக்கு பின்னர் நிலம் பார்த்தது. விடுதலைக்கான சாட்சிகளாய் உடைந்து நொறுங்கிய கல்லறைகளும் நடுகல்களும்,ஒரு கற்குன்றாய் குவிக்கப்பட்டு துயிலுமில்லங்களில் வணங்கப்பட்டது. நீண்ட வருடங்களின் பின்னர் தீபங்கள் தம் இருதயத்தை காற்றில் சாய்த்து அணையாமல் எரிந்தன. அந்தத் தீபத்தின் ஒளிக்கு கல்லறைகளாய், சத்தியமாய் நீண்டிருந்த மாவீரர்களின் தியாகம் நெய்யாக ஊறிக்கொண்டிருந்தது. என்றென்றைக்கும் வானத்தில் நிலைத்திருக்கும் நித்திய நீதிக்காய் மக்கள் துயிலுமில்லங்களுக்குத் திரண்டார்கள். அலைகள் அடங்கி நின்ற கடலின் கொந்தளிப்புப் போல மக்கள் கண்ணீராலும் சொல்லியழ முடியாத கோபங்களோடும் துயரத்தின் ஆழம் சென்று குமுறி எழுந்தார்கள். தொழுதுகொள்ளவேண்டிய நிலத்தின் தெய்வங்கள், மாவீரர்கள் என்பதை மக்கள் அபத்தமான அரசியலாளர்களைக் கடந்து சத்தியக் கண்ணீரும் வணக்கமும் செலுத்தினார்கள்.


நாம் சிரிப்பதற்கும் தும்முவதற்கும் இடையில் அரசியல் தோற்றங்கள் காண்பிக்கப்பட்டுவிடுகின்றன. இனப்படுகொலைக்கு பின்னரான ஈழத்தமிழர்களின் ஒவ்வொரு கணங்களும் அரசியல்பூர்வமானது. நம்மைப் பலியிடும் சிங்கள ஆட்சியாளர்களின் மேய்ச்சலுக்கு பசும் புற்தரையாகும் விநோதமான பாவிகளாய் ஈழத்தமிழர்களாகிய நாம் இருக்கிறோம். அரசியல் அர்த்தத்தில் நாம் விநோதமான பாவிகள். மகிந்த அரசின் கொடுங்கோலாட்சிக்கு முற்றுப்புள்ளியிட்டு நல்லிணக்க அரசை அதிகாரத்தில் அமர்த்துவதன் மூலம் தமிழ்மக்களுக்கான   நீதியைப் பெற்றுவிடலாம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழீழ மக்களிடம் கூறியது. தேர்தல்வெற்றிக்குப் பின்னர் தமிழர்களுக்கு சிறுதுரும்பு கூட நன்மைகிட்டவில்லையே தவிர தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு பயங்கரநன்மை கிட்டியது. வெளிப்படையான நன்மைகளில் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித்தலைவர் பதவி இரா.சம்பந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது

இனப்படுகொலையின் முதல்நிலைக்குற்றவாளியான மகிந்த ராஜபக்சவை தமிழ்மக்களின்  வாக்குகள் தான் தோல்வியடையைச் செய்தன. அது போலவே மகிந்தவின் தோல்வியே உலகளவில் பிரமாண்டச் சிக்கலாய் உருப்பெருத்து நின்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை அதன் முதற்தன்மையில் இருந்து நீர்த்துப்போகவும் செய்தது. ஆக இலங்கையில் மகிந்தவை தோல்வியுறச் செய்ததன் மூலம் சர்வதேச அரசியல் அணுகுமுறைகளில் தோல்வியுற்றது இனப்படுகொலைக்கு உள்ளான தமிழீழ மக்களின் கோரிக்கையான இனப்படுகொலைக்கான நீதி விசாரணை மட்டும்தான். இது ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தலைமைகளின் சறுக்கல்கள் என்று மட்டும் பொருள்கொள்ள முடியாது. அதனைக் கடந்து அவர்களின் நிகழ்ச்சி நிரல் இது. நல்லிணக்க அரசான மைத்திரி அரசை தமிழர்களுக்கு நீதிப்படையலிடும் தேவஅரசாக தமிழர்கள் மத்தியில் உருவமெழுப்பி பூசை செய்து முடித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் காதில் பூவை மட்டுமே வைத்திருக்கிறது.

மேலும் சிங்கள அரசியல் கலாச்சரமானது வெளிச்சவீட்டுக் கலாச்சாரம் தான் என்பதை உணர்ந்துகொள்ளும் வல்லமை உள்ளவர்கள் இப்போது நேரடியான தமிழர்களின் அரசியலில் இல்லை. வெளிச்சக்கூட்டின்  கோணங்களும், நிறங்களும், வளைவுகளும் மாறிமாறியிருந்தாலும் உள்ளே எரிகிற வெளிச்சம் ஒன்று தான். வெளிச்சக்கூட்டுக்கு நீலநிற டிசுத் தாள் சுற்றப்படும் இடத்தில் அது நீல நிறமாகவும், பச்சை நிறம் சுற்றப்படும் இடத்தில பச்சை நிறமாகவும், வெள்ளைநிறம் சுற்றப்படும் இடத்தில் சிவப்பாகவும் தோன்றுவதைப் போல தோற்றம் காண்பிக்கும் அரசியல் கலாச்சாரத்தின் அடியொற்றி ஆட்சி நடாத்தும் மைத்திரி ரணில் அரசின் டிசுத் தாளின் நிறத்திற்கு பெயர் நல்லிணக்கம். ஆனால் அதற்குள் நின்றெரியும் வெளிச்சம் இனவாதத்திலானவை. தமிழர் விரோதப்போக்குடையவை. 

இந்த தோற்றம் காண்பிக்கும் அரசியலுக்கு இப்போது பலியாகிக்கொண்டிருக்கும் பாவியராய் தமிழீழ மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அதன் அண்மையகால பலியெடுப்பு, மாவீரர் நாளில் நிகழ்த்தப்பட்டது. தமிழ்மக்களின் நெஞ்சத்தில், வீரர்களாக மதிக்கப்படும் தியாகிகளான மாவீரர்களை நினைவு கூற அனுமதிப்பதன் மூலம் தமிழர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுக்கொண்டு அதனை ஒரு திரவியமாய்க் காவிச்சென்று சர்வதேசத்திடம் தமது நல்லிணக்கத்திற்கான சான்றிதழையும் நல்லிணக்க அரசு பெற்றுவிட்டது. அதற்கும் மேலாக இலங்கையில் தடைசெய்யப்பட்ட உலகின் மிகப்பயங்கரமான பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களை தாம் நினைவுகூற அனுமதித்திருப்பதாக அது பிரச்சாரம் கூட செய்யும். நம் கண்ணீருக்குள்ளும் இரத்தத்திற்குள்ளும் ஓடித்திரியும் பலவீனங்களை சிங்கள ஆட்சியாளர்கள் அடையாளம் கண்டுவிடுகிறார்கள். அதற்கான பொறியை தமிழ் அரசியலாளர்களை வைத்துக் கொண்டே தயார்படுத்தியும் விடுகிறார்கள். இந்தக் கருத்திற்கு சாட்சியாக மாவீரர் நாளுக்கான பொதுச்சுடரினை பெரும்பாலான துயிலுமில்லங்களில் ஏற்றிவைத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தான்.அல்லது வடமாகாண சபை உறுப்பினர்கள் தான். 

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கான பொறியாக தமிழ் அரசியலாளர்களை மாற்றிவிடுகிற அதே நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் அந்தப் பொறியில் மக்களின் நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புகளை சுக்குநூறாக்கி தம்மை கதாநாயகனாக்கு கபட அரசியலை முன்னெடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல தம்மை தலைவர் பிரபாகரனுக்கு பின்னரான பிரபாகரன்களாகவும் உருவகிக்க ஆசைப்படுகிறார்கள். அது அற்பத்தனமான அரசியல். சிங்கள ஆட்சியாளர்களின் பொறிக்கிடங்காக இருந்துகொண்டு மக்களைக் காவு வாங்கும் கபடத்தை செய்து கொண்டு பிரபாகரனின் பெயரைக் கூட அவர்கள் உச்சரிக்ககூடாது

ஆனால் அவர்கள் தம்மை அந்த இடைவெளியில் நிரப்பபார்க்கிறார்கள். பொதுச்சுடரினை ஏற்றினால் பிரபாகரன் ஆகமுடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். தங்கள் ஒவ்வொரு செய்கைகளின் மூலமும் தமது மாபெரும் குற்றங்களை மறைக்க அல்லது அழிக்கத்துடிக்கும் சிங்கள் ஆட்சியாளர்களுக்கு சோரம் போகிறவர்களாய் பெரும்பாலான தமிழ் அரசியலாளர்கள் தாயகத்தில் இருக்கின்றனர்கள். அவர்கள் இந்த நல்லிணக்க அரசிற்காய் கலையாடும் காவலர்கள்.



தாயகம் இப்படியான சிக்கல்களுக்குள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர் நாடுகளின் அனுட்டிக்கப்படும் மாவீரர் நாளுக்காய் செலவழிக்கப்படும் பொருளாதார வளங்கள் குறித்து கவலை மேலிடுகிறது. உண்மையில் உணவின்றி, தூக்கமின்றி களத்தில் விடுதலைக்காய் இரத்தத்தில் மிதந்த தியாகத்தின் ஆன்மாக்களை இவ்வளவு செலவுகளோடு தான் நாம் வணங்கவேண்டுமா

இந்த மாவீரர்களின் குடும்பங்களும், பிள்ளைகளும் இன்றைக்கு ஒரு நேர உணவை எப்படி உண்கிறார்கள் என நினைக்கக் கூட நேரமில்லாமல் நிதிவளங்கள் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது. அதுமட்டும்மல்ல ஐரோப்பா நாடுகளில் நடக்கும் மாவீரர் நாளுக்காய் தமிழ்நாட்டில் உள்ள உணர்வாளர் ஒருவரை, மிகக் குறிப்பாக அவர் பிரபலமானவராக அல்லது திரையுலக அடையாளம் கொண்டவராக தேர்ந்தெடுக்கும் தன்மை எந்தவகையிலானது. தாயகத்தில் மாவீரர் நாளுக்காய் கூடிய மக்கள் கல்லறைகள் நோக்கித் தான் நகர்ந்தார்கள். அங்கு எந்தப் பிரபலங்களும் அழைக்கப்படவில்லை. புலம்பெயர் நாடுகளில் உணர்வெழுச்சி நிகழ்வுகள் ஏன் இப்படியாக மாற்றம் கண்டது என அங்குள்ள மக்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும்.

என்னைக் கைலாகு செய்த பின்னர் இப்ப ஈழத்தில் பிரச்சனையில்லை தானே, என்று கேள்வி கேட்பவர்களை நான் நாளையும் சந்திப்பேன். அவர்கள் அதே கேள்விகளை வேறுமாதிரி கேட்பார்கள். உங்கள் நாட்டில் நல்லிணக்கம் வந்துவிட்டது தானே இப்போது?
நல்லிணக்கம் என்பது மாவீரர்தினத்திற்கு அனுமதிதருவதில்லை. அவர்கள் எம் தெய்வங்கள், அவர்களை வணங்குவது எம் குலப்பெருமை. அதற்கு அவர்கள் அனுமதி எனக்குத்தேவையில்லை

நல்லிணக்கம் என்பது எனது தமிழீழ நாட்டில் நான் விரும்பிய எனது நாட்டின் பாடலைப் பாடுகிற போது பக்கத்து நாடான இலங்கையிலிருந்து அவர்கள் கைதட்டி ரசிக்கவேண்டும். முத்தங்களை பரிமாறவேண்டும். அவர்கள் எப்போதும் எம்மை முத்தமிடவிரும்பியது கிடையாது. எங்கள் கன்னங்களை குண்டுகள் எறிந்து விளையாடும் மைதானம் என்று நம்பும்மூளை அவர்களிடமிருக்கிறது. சிங்களர்களின் நல்லிணக்கம் தமிழர்களுக்கு முண்ட வாழ்வு. நாம் தலையுடன் வாழவிரும்பும் விடுதலை வேட்கை கொண்ட தமிழர்கள்.

நன்றி - ஐ.பி.சி பத்திரிகை 


 

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி