கிழவி ( சிறுகதை )
குயிலினிக்கு இன்றைக்குத் தான் 24 வயது தொடங்கியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் தாயும் தகப்பனும் ஒரே இடத்தில் குண்டு வீழ்ந்து செத்துப் போகும் போது எஞ்சிய கண்ணீரைப் போலவே குயிலினியும் அம்மம்மாக் கிழவியும் காயங்களற்று தப்பினார்கள். அந்த நாளும் அவளுக்கு பிறந்த நாளாகத் தான் இருந்தது. ஏப்ரல் மாதம் 27 ம் திகதி பதுங்குகுழியில் தாயையும் தகப்பனையும் புதைக்கிற பொழுது பூமியின் மிக இளமையான துயரம் குயிலினியிடம் இருந்தது. தகப்பனின் சிதைந்து போன தலையை மண் போட்டு மூடிய குயிலினியின் கைகளுக்குள் இருந்து வீழ்ந்த மண் துகள்களில் துன்பத்தின் மலை எழுந்தது. இனிமேல் குண்டு வீழ்ந்தால் எம்மில் இருவரும் மிச்சமில்லாமல் இறந்து போகவேண்டுமென்று கிழவி அழுது சொன்ன வார்த்தைகள் போர்க்க்களத்தின் காற்றில் இழைந்தது. ஆனால் இருவரும் சாவிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாய் எல்லாவற்றையும் கடக்க நேர்ந்தது. முள்ளிவாய்க்காலில் இராணுவம் மக்களை பேருந்துகளில் ஏற்றிய பொழுது கிழவி குயிலினியைப் பிடித்திருந்த பிடியின் இறுக்கம் இப்பொழுதும் அவளின் கைகளில் தெரியும். முகாம்களில் அடைக்கப்பட்டிருந...