2016.12.31









மக்களையும் அவர்கள் கண்ணீரையும் உதாசீனம் செய்கிற அரசியல் கட்சியாக தமிழீழ மக்களின் அரசியல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருப்பெற்றிருக்கிறது. இனப்படுகொலைக்கு உள்ளான மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களுக்குக் கூட தீர்வைப் பெற்றுக்கொடுக்க இயலாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்து தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தந்துவிடுமென மக்கள் நம்புவதுகிடையாது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியும் இனப்படுகொலையும் ஒரே நேரத்தில் நிகழ்ந்து முடிந்ததோடு தமிழ் மக்களின் வாழ்வும் இருண்ட பாதாளத்தில் தள்ளிவிடப்பட்ட அரசியல் விளையாட்டுப் பொம்மையாக மாற்றம்கண்டு விட்டது. ஒரு வகையில் வல்லாதிக்க சூழ்ச்சிகளால் எமது அரசியல் கோரிக்கைகள் அலைக்கழிக்கப்படுவதைப் போல தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் அவமதிக்கப்படுகிறது.

இனப்படுகொலைகளுக்கெல்லாம் இனப்படுகொலையென மானுட சமூகத்தால் கண்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னரும் இலங்கை அரசுடன் நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடி வருவதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சம்பந்தன் அவர்கள் 2016ஆம் ஆண்டுக்குள் தமிழர்களுக்கு சிங்களர்கள் தீர்வதைத் தருவார்கள் என குறிப்பிடுகிறார். அவரின் கணக்குப்படி இன்னும் ஆறுமாதங்களில் இலங்கைதீவில் நிலவி வந்த நூறாண்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டு விடும். சம்பந்தன் போன்ற அரசியல் தலைமைகளிடம்  இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் குறித்து கடுகளவேனும் அக்கறையோ, பரிதாபம் கூட இல்லாமல் தானிருக்கிறது.


இலங்கையின் பாராளுமன்றில் எதிர்கட்சியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடாக சொல்வதற்கு எதுவுமேயில்லை. பாராளுமன்றில் எதிர்கட்சியாக பொறுப்பேற்றுக் கொண்ட அடுத்த சில வாரங்களில் ஒரு சிங்களக் கட்சி எப்படி எதிர்கட்சியாக செயற்படுமோ அது போலவே தாமும் செயற்படுவோமென சம்பந்தன் கூறியதன் அடியாழத்தில் எல்லாவிதமான சமரசங்களும் ஒளிர்ந்திருந்தது. 

புலிகள் போரியல் ரீதியாக அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீது நிகழும் அவலங்கள் அதிகரித்துள்ளன. மக்களுக்காக பேசுகிறோம், அரசோடு கலந்துரையாடுகிறோம் என பேசுவது கலந்துரையாடுவதும் தான் தமக்கான அரசியல் என நம்பும் அல்லது அப்படியானதாய் ஏமாற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் களத்தில் இருந்து முற்றாக நீக்கம் செய்ய வேண்டிய காலம் எமது மெய்மையான அரசியலில் தொடங்கிவிட்டது.

பாதிக்கப்பட்டவனின் கண்ணீரும் கதறலும் லாபம் பார்க்கும் அவர்களின் வியாபாரங்களில் பின்னணி இசையாக மாற்றுவிக்கப்படுகிறது. நிகழ்ந்தது இனப்படுகொலை தான் என்று மேற்குலகத்தில் பல்வேறு தளங்களில் கூறப்பட்டு அதற்கான நீதி விசாரணையைக் கோருகிற காலகட்டத்தில் உள்ளக விசாரணையைக் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தமது மென்போக்கு நிலைப்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு அவமானகரமானது. இனப்படுகொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு உலகம் தனது அரசியல் லாபங்களுக்குள்ளால் அவர்களை நெருங்கி வருகிற போது அவர்களை எல்லா இடங்களிலும் காப்பாற்றி விடுகிற சேவகத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தான் நிகழ்த்தியது.

நடந்து இனப்படுகொலைக்கு பின்னரும் காணாமல்போனவர்கள, தமிழ் கைம்பெண்கள், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் என நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அவலங்களைப் பற்றியும் கரிசனம் கொண்டு செயற்படவேண்டிய ஒரு அரசியல் கட்சி இப்படி தலைகீழான நிலைப்பாடுகளுடன் தொடர்ந்து செயற்படுமாய் இருந்தால் எளிய மனிதனின் கல் எறிகளை அவர்கள் வாங்கத் தொடங்குவார்கள். அவலமும் துயரும் நிறைந்த வாழ்வில் இழந்து போனவர்களின் கண்ணீருக்கும் நீதிக்குமாய் வீதியில் இறங்கிப் போராடுகிற சாதாரண மனிதனின் உழைப்புக்கும் நீதிக்கான போரட்டத்திற்கும் கூட இவர்களுக்கு பந்தமில்லை.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் பல்கிப் பெருகும் குழுவாத மோதல்களும் அவர்களுக்கான இணையங்களில் மாறி மாறி எழுதப்படும் வாசிக்கவே இயலாத வசவுக் கட்டுரைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் அரசியலில் என்ன தீர்வைப் பெற்றுத் தரமுடியும். நல்லிணக்க அரசு என்று மைத்திரிக்கு புகழாரம் சூட்டுவதை தமது பணியாகக் கொண்டிருக்கிற தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பிரதிபலனாக அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் நிகழ்ந்த பிறந்தநாள் விழாவிற்கு மைத்திரியைக் கூப்பிட்டு கேக் வெட்டியதே நடந்திருக்கிறது.
மனச்சாட்சியும் இனமானமும் ஏன் மனிதாபிமானமும் அற்ற அரசியல்வாதிகளாக அவர்கள் வீங்கிப் பெருத்துவிட்டனர். சம்பந்தன் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பங்கெடுத்த இராணுவ வீரர்களுக்கு பட்டமளிக்கும் விழாவில் பங்கெடுத்து இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். 

தனது இனத்தின் மக்களைக் கொன்ற இராணுவ வீரர்களுக்கு அந்த இனத்தின் அரசியல் கட்சியின் தலைமையாக இருந்து கொண்டே இப்படி நடந்து கொள்ளும் சம்பந்தனை அந்தக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினர் கூடவா கேட்க முடியாமல் போய்விட்டது. தமக்கான அதிகாரங்களும் பொறுப்புக்களும் மக்களின் அழுகையிலும் குருதியிலும் இருந்து தான் வந்தது என எண்ணும் மனச்சாட்சி கொண்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கூடவா இல்லாமல் போய்விட்டார்கள். நாம் சிங்களவர்களிடமும், சர்வதேசத்திடம் நீதி கேட்பதற்கும் முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் நீதியைக் கேட்கவேண்டும்.

சிங்கள அதிகாரம் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தந்துவிடுமென எந்தத் தமிழ் தலைமையும் நம்பியது கிடையாது. அப்படி நம்பியவர்கள் தமிழர்களின் மனத்தில் எப்படியானவர்களாக இருக்கிறார்கள் என்பது வரலாறு. வடக்கிலும் கிழக்கிலும் இருந்தபடி தெற்குக்கு சேவகம் செய்கிற தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் பாதிக்கப்பட்ட எமது இனத்திற்கான தீர்வு குறித்து நியாயமான சிந்தனை கூட இல்லை. சம்பந்தன் மக்களை ஏமாற்றும் ஒரு வித்தைக்காரன். அவர்களால் ஒரு பிரச்னைக்கான தீர்வுக்காய் தாம் அங்கம் வகிக்கும் பாராளுமன்றத்தின் முன்பு கூட சத்தியாக்கிரகத்தை நிகழ்த்தமுடியாது. சத்தியம் உள்ளவர்களிடம் தான் போராட்டக்குணம் இருக்கும்.

எமது எதிரியானவன் உலகளவில் இனப்படுகொலையாளியாய் அம்பலப்பட்டு போனதன் பிறகும் அவர்களைக் காப்பாற்ற துடிக்கும் சம்பந்தனிடம் இருந்து மக்களுக்கான தீர்வு வந்துவிடுமென தமிழீழத்தின் இந்தத் தலைமுறை நம்புவதற்கு தயாரில்லை.


இந்தத் தமிழீழ தலைமறை கூழ் முட்டைகளையும், சப்பாத்துக்களையும் கொண்டு அவர்களை எதிர்கொள்கிற ஜனநாயாகப் போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடையும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாம் நிகழ்த்திய அத்தனை ஏமாற்று வேலைகளுக்குமாய் தமிழீழ மக்களுக்கு பதில் சொல்லித் தான் ஆகவேண்டும் என்கிற திகதி இது தான் 2016.12.31.        

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி