சம்பந்தன் சொல்லும் தீர்வை தமிழீழர்கள் நம்பவில்லை









2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் இற்றைவரைக்கும் ஈழத் தமிழர்களின் அரசியலில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று இருந்தாலும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு அதிலிருந்து எந்த ஆறுதலும் கிட்டவில்லை. ஒரு மாபெரும் இனப்படுகொலைக்கு பின்னான காலத்தில் வாழும் ஈழத் தமிழர்களின் அரசியல் அணுகுமுறைகள் மிகவும் வேகக்குறைவான அதே நேரத்தில் விவேகமற்ற தன்மை பொருந்தியதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மற்றும் நிர்வாக வீழ்ச்சிக்கு பின்னர் அரசியல் ரீதியாக பேரம் பேசும் சக்தியை ஈழத் தமிழ் அரசியல் களம் இழந்து விட்டது என்பது பேருண்மை. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சந்தித்து களத்தில் வாழும் மக்களின் நிலை குறித்து புலம்பெயர் நாடுகளில் இயங்கும் அமைப்புக்கள் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன் எடுத்திருக்கிறது என்கிற கேள்வியை எழுப்புவதிலிருந்து தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னான ஈழத் தமிழர்களின் அரசியல் தொடக்கமாகிறது. 

வாழ்க்கையின் மூன்றில் இரண்டு பங்கை போராட்டக் களத்தில் இழந்த ஒவ்வொரு போராளியும் இன்றைய நாட்களில் எதிர்கொள்கிற வாழ்வாதார சிக்கல்களை போக்குவதற்கு களத்திலும்,புலத்திலும் இயங்கும் அரசியல் அமைப்புக்களிடம் எந்தவொரு திட்ட வரையறையும் கிடையாது. தமிழர்களின் அரசியல் அமைப்பாக புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தம்மை நிலைநிறுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று பேசுவதற்கு தன்னை தயார்படுத்தக்கூடவில்லை. இதனைப் போலவே புலம்பெயர் நாடுகளில் இயங்கும் பல்வேறு அமைப்புக்களும் இதனை அவசியமான ஒரு அரசியல் வேலைத்திட்டமாக உணரவில்லை. 

நாட்டின் விடுதலைக்காக ஒரு விடுதலை அமைப்பை நம்பிக் களத்தில் நின்று போராடிய போராளிகளின் இன்றைய நிலை மிகவும் துர்ப்பாக்கியமானது.போர்க்காயங்கள் அடைந்து படுத்தபடுக்கையிலேயே தமது இயற்கை உபாதைகளைக் கழிக்கும் அளவுக்கு காலத்தின் விதி அவர்களை விலங்கிட்டு இருக்கிறது. ஆனால் குறித்த கள மற்றும் புல அமைப்புக்கள் இவர்களின் பரமாரிப்பு மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்களை தீர்த்து வைப்பது குறித்து சிந்திப்பதாக தெரியவில்லை. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இன்னும் யோசிக்கக்கூடவில்லை. ஆனால் அதனைக் கடந்து நாம் எல்லாவற்றையும் நினைவு கூறவும் எழுச்சி மிகு நிகழ்வுகளை கொண்டாடவும் தொடங்கிவிட்டோம். 

ஈழத்தமிழர்களுக்கு நடந்த மாபெரும் மனிதப் படுகொலைகளை முன்வைத்து நாம் உலகத்திடம் நீதி கேட்கும் முன் தாயகத்தில் அல்லற்படும் வாழ்வாதரத்தின் அடிப்படை தகர்ந்து போய் நிற்கும் மக்களுக்கு, போராளிகளுக்கு உதவுவது தான் மானுட நீதியாக இருக்கும்.மேலும் இதற்கு பிறகான அரசியலாகவே நாம் எதனையும் பேசமுடியும். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இலங்கை பாராளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக இருந்தாலும் அது தன்னை முழு அளவிலான ஆளும்கட்சியின் எதிர்புறத்தில் உள்ள ஆளும் கட்சியின் உறுப்பினராகவே இருக்கிறது. காணாமல்போனவர்களையும் அரசியல் கைதிகளையும் குறித்து சம்பந்தன் தேர்தலுக்கு முன் கூறிய கூற்றுக்களிலும் இப்போது அவர் அது குறித்து பேசும் தொனியுமே ஏமாற்றத்தை தருகிறது. சம்பந்தன் பாதிக்கப்பட்ட தனது இனமக்களின் கண்ணீரை தனது வேட்டியை முட்டிக்கால் வரை தூக்கி நடந்து கடக்கிறார். அவர் மக்களை ஏமாற்றும் இன்னொரு தமிழ் அரசியல் தலைவர் என்பது அவரின் ஆட்சிக்காலம் முடிகிற பொழுது தீர்மானமாகிவிடும். ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றில் ஒரு நீதிமனம் கொண்ட அரசியலாளனாய் சம்பந்தன் எப்போதும் இருந்தது கிடையாது. இனப்படுகொலைக்கு பின்பான இலங்கையின் ஆட்சிமாற்றத்தில் மேற்குலகத்தின் ஒரு பிரதான கைப்பொம்மையாக சம்பந்தன் செயற்பட்டது இன்னொரு இனப்படுகொலைக்கு சமனான விடயம்.





சீன சார்பு மகிந்தவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவது மட்டுமல்லாமல் அமெரிக்க சார்பு ரணிலை அரசியல் அதிகாரத்துக்கு கொண்டு வர விரும்பிய அமெரிக்காவின் சொல் பேச்சுக் கேட்கும் வளர்ப்புப் பிராணியைப் போல சம்பந்தன் செயற்பட்டுவிட்டார். அடிப்படையில் அவர் இனப்படுகொலைக்கு உள்ளான மக்களின் தேவையையும் அவர்களின் அரசியல் விருப்பையும் செவிமடுக்கக் கூட தயார் இல்லாத ஒரு தமிழ் அரசியல்வாதி. 

இந்த நிலையில் மைத்திரி அரசுக்கான தமது ஆதரவை தெரிவித்தது மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கிக்கொடுத்து நல்லாட்சிக்கான அரசை பெற்றுக் கொடுத்துவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஒப்பீட்டளவில் மைத்திரி அரசு நல்லாட்சி அரசு என்று சிங்களத் தலைவர்கள் கூறியதை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியது தான் அதிகம். சந்திரிக்கா ஆட்சியப் பெறுவதற்கு தன்னை சமாதானத்தின் புறா என்று எப்படிக் கூறினாரோ  அது போலவே மைத்திரி ரணில் அரசு நல்லிணக்கத்திற்கான அரசாக தன்னை வெளிப்படுத்தியது. மகிந்த அரசு நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்தத் தவறிவிட்டது என குறை கூறிக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றிய மைத்திரி அரசும் நல்லிணக்கத்திற்காக எதனையும் இதுவரையும் செய்தது கிடையாது. அரசியல் கைதிகள் தொடர்பான விடுதலை, காணமல் போனோர் தொடர்பான விசாரணை, ஆற்றுப்படுத்தல், நிலம் கையகப்படுத்தல்,அரசியல் தீர்வு போன்றவைகள் குறித்து இந்த அரசு ஒரு போலியான அணுகுமுறைகளையும், அறிக்கைகளையும் தொடர்ந்து பொதுவெளியில் முன்வைத்தபடியே இருக்கிறது.
 

2016ம் ஆண்டில் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்துவிடுமென சம்பந்தன் தேர்தல் காலத்தில் கூறியிருந்த போதிலும் அதனை இப்போது தனது பதவிக்காலம் முடிவதற்குள் என மாற்றியிருக்கிறார்.  தனது பதவிக்காலம் முடிகிற பொழுது இதே சம்பந்தன் இன்னொன்றை சொல்லிவிட்டு மிகவும் எளிமையாக பிறிதொரு ஆட்சி மாற்றத்துக்கு உழைப்பவராக இருக்கவும் கூடும். “இனிமேலும் தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று தந்தை செல்வா கூறியதை விடவும் மேலே சென்று வேறொரு வாக்கியத்தைத் தான் சம்பந்தன்களால் சொல்ல முடியும். 

ஆனால் இனப்படுகொலையை சந்தித்து அதற்குள் வாழ்ந்த தலைமுறையிடம் இப்படியான நழுவிப் போகும் அரசியல் எடுபடாமல் போகிற காலமொன்று மிகவும் நெருங்கிக் கொண்டு வருகிறது. இனப்படுகொலைக்கு பின்பான ஈழப் பிரச்சனையை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தமது நலன்களுக்குள்ளால் அதனை நோக்கினாலும் தமிழர் தரப்புக்கு அதிலொரு அரசியல் ஆரோக்கியமிருந்தது. மேற்குலக எதிரியான மகிந்தவை அடிபணியச் செய்வதற்காக அமெரிக்கா தனது ஆதரவினை ஈழத்தமிழ் அரசியலின் ஈடு செய் நீதியின் பக்கம் திருப்பியது. அதனால் இந்த மானுடப் படுகொலையில் அமெரிக்காவின் இராணுவத் தன்மை வாய்ந்த பங்குகளை தமிழ் மக்கள் மறந்து விட்டார்கள் என்றில்லை. மகிந்தவின் இறுதிக்காலங்களில் சீனாவின் இலங்கை படர்ச்சி அமெரிக்காவையும் இந்தியாவையும் பல்வேறு வகைகளில் அச்சுறுத்தியது. அமெரிக்கா போன்ற வல்லாதிக்கத்தோடு சீன சார்பு மகிந்தவை மோத விடுவதன் மூலம் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கான அரசியல் லாபங்கள் உலகளவில் ஏற்பட்டிருக்கும் என்ற போதிலும் சம்பந்தன் மைதிரிக்கு ஆதரவு வழங்கி மகிந்தவை தமிழ் மக்களின் வாக்குகளால் தோற்கடித்தது மட்டுமல்ல அதன் உட்புறத்தில் தமிழ் மக்கள் மாபெரும் தோல்வியைத் தழுவி விட்டார்கள். 

போர்குற்ற விசாரணை, இனப்படுகொலைத் தீர்மானம், சர்வதேச விசாரணை, பொருளாதாரத் தடை, எனத் தொடங்கிய இனப்படுகொலைக்கு பின்னான சர்வதேச அரசியல் கலப்பு நீதிமன்ற விசாரணையில் கரையொதுங்கி சமஸ்டியில் அசைந்தாடி இப்போது அரசியல் தீர்வில் தேய்ந்து போய் நிற்கிறது. நல்லிணக்கம் என்பதற்கும் எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அடிப்படையில் தொடர்புகளே இருப்பதில்லை. யுத்தத்தில் தமிழ் மக்கள் சுமந்து நிற்கும் பளு அரசியலின் மூலதனமாக மாறியிருந்தாலும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கான நீதியைத் தருவார்கள் என நம்புவதற்கு தமிழ் மக்கள் ஒருபொழுதும்  சம்பந்தன்களாய் இருந்தது கிடையாது. 

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் மாறி மாறி வரும் சிங்களத் தலைவர்களை எதிர்கொண்டு வருகிற தமிழ் மக்களுக்கு மைத்திரியும் ரணிலும் எந்தவகையிலும் வித்தியாசப்படவில்லை. அவர்கள் சிங்கள அரசுகள் நிகழ்த்திய அத்தனை தமிழினப் படுகொலைகளையும் பூசி மொழுகி சர்வதேசத்திடமிருந்து ஆட்சியாளர்களையும் படுகொலைக்கான பங்காளிகளையும் காப்பாற்றிவிட்டனர். தமிழ் மக்களைக் கொன்ற ஆட்சியாளர்களை காப்பாற்றும் இந்த சிங்கள அரசின் நடவடிக்கையில் சம்பந்தன் தலமையாகவிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பங்கு கொள்கிறது. முள்ளிவாய்க்கால் யுத்த வெற்றி விழாவில் சம்பந்தன் பங்கு கொண்டதோடு மட்டுமல்லமால் யுத்தத்தில் பங்கெடுத்த இராணுவத்தினருக்கான  பட்டமளிப்பு வைபவத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.  சிங்கள அரச படைகளின் யுத்தம் என்பதன் உட்கருத்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அன்றி வேறு எதுவாக இருக்கமுடியும். 

ஆக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பங்கெடுத்த இராணவத்தினருக்கு பட்டயங்கள் வழங்கும் ஒரு அரசியல்வாதி தமிழ் மக்களுக்கு எவ்வாறு தீர்வைப் பெற்றுத்தரமுடியும். இந்த காட்சியின் மூலம் யுத்தத்தின் அதி கொடூரமான பாரத்தை சுமந்தலையும் எளிய மக்கள் குறித்து களத்தில் இயங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிதளவு அக்கறையும் கிடையாது எனும் முடிவுக்கு வந்துவிடமுடியும்.
 
நல்லாட்சி அரசு பதவி ஏற்றுக் கொண்ட நூறு நாட்களுக்குள் போர்குற்ற விசாரணையின் முதல் நிலைக் குற்றவாளியான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் பட்டம் வழங்கிக் கவுரவித்தது. இது தொடர்பாக சம்பந்தனின் நிலைப்பாடு தான் என்ன? இத்தனை காலமாகிவிட்ட விட்ட போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினருமே இதற்கு கண்டனங்களைக் தெரிவிக்காதது ஏன்? நல்லிணக்கம் பற்றி பேசுகிற மைத்திரி அரசு யுத்தத்தின் வெற்றியைப் பாராட்டி மொத்த இனப்படுகொலையை வழிநடாத்திய ஒரு படுகொலைக்காரனுக்கு பட்டம் வழங்கியது தான் சம்பந்தன் கூறிய நல்லாட்சியா? மக்களை ஏமாற்றும் ஒரு அரசியலை சம்பந்தன் முன்னெடுக்கிறார். 

ஆனால் தமிழ் மக்கள் ஏமாறுபவர்கள் கிடையாது. அவர் தான் தீர்வைப் பெற்றுத் தந்துவிடுவேன் என நம்புகிறார். ஆனால் இப்படியான ஒருவரை தீர்வுக்காக நம்பமுடியாது. மக்களின் காயங்களை அவர்களின் அவலங்களைப் புரிந்து கொள்ளக் கூட முடியாத ஒருவரால் அந்த மக்களின் அரசியலுக்கு தலைவராக இருக்க முடியாது. இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் எமது அரசியல் போராட்டம் இறுகிவிட்டதை உணரக்கூடியவர்களாய் நாம் எத்தனை பேர் இருக்கிறோம்? நாம் இப்படியான போலித்தனமான அரசியல்வாதிகளை நிராகரிக்கவேண்டும்.

நம்மிடம் எப்போதும் நீதியிருக்கிறது. நாம் எமது விடுதலைக்காய் இழந்தது ஏராளம். நமக்கு ஒரு வாழ்வு வேண்டும். இவ்வளவு இன்னல்களை எதிர்கொண்டு களத்தில் வாழும் மக்களுக்கு உலகெல்லாம் பரந்து வாழ்கிற புலம்பெயர் வாழ் தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இனப்படுகொலைக்கு பிந்திய தாயக மக்களின் இடர்பாடுகளை களைவது குறித்து புலம்பெயர் அமைப்புக்களிடம் ஏதேனும் வரைவுத் திட்டங்கள் தானும் உண்டா? தாயகத்தில் வாழ்கிறவர்களை கைவிட்டு விட்டு நாம் எந்த நீதிக்காக தொடர்ந்து போராடப்போகிறோம். அரசியலாலும் நாளாந்த வாழ்வின் நெருக்கடிகளாலும் அரசியல் கைதிகளாய் மாறி நிற்கும் தாயக மக்களையும் தாயகத்தையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழீழத்தவரிடமும் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

அகரமுதல்வன்
25.05.2016

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி