அண்ணை எப்ப சாவான், திண்ணை எப்ப வெளியாகும்


எதிரியால் ஆக்கிரமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.- வே பிரபாகரன் 




இந்து சமுத்திர பிராந்தியத்தின் கதாநாயக புவிப்பரப்பாக இருக்கிற இலங்கைத் தீவில் நிகழும் இனப்பிரச்சினையை வெறுமென குருடன் யானையைப் பார்த்தது போன்று பார்க்கிற போக்குகள் அபத்தமானது. நூறாண்டுகால இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை அதன் குரூரமான மனிதப் பேரிழப்புக்களை உலகம் உணரமறுத்தது போலவே அந்த நிலப்பரப்பில் வாழும் மனிதர்களாகிய நாமும் உணரவில்லை. தமிழீழர்கள் என்கிற தேசிய இனத்தின் உரிமைக்கான தொடர்ச்சியான செயற்பாடுகள் காலத்துக்கு காலம் வெவ்வேறு வடிவ மாற்றங்களோடு பயணிக்கிறது. அகிம்சை வழியிலான தமிழர்களின் போராட்டத்தை சிங்கள அதிகாரபீடங்கள் ஒரு நீண்ட நகைச்சுவைக் காட்சியைப் போலவே எடுத்துக்கொண்டனர். தந்தை செல்வா ஒரு உன்னதமான உறுதிப்பாடு கொண்ட தலைவர் என்ற போதிலும் அவரின் குரல் கொழும்பின் பவுத்த சக்கரங்களால் நசிக்கப்பட்டது. அவரை தவிர்த்தால் அதன் பின்னான தமிழ் மிதவாத அரசியல்வாதிகள் பலர் சளைக்காத ஒரு நகைச்சுவையாளர்களைப் போலவே கொழும்புக்கு காட்சி நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.


ஒரு மாபெரும் இனப்படுகொலை நடைபெற்று இற்றைக்கு ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் சூழலில் உலக அரசியலில் தணியாத வெப்பம் நிறைந்த விவாதமாக, கருத்தாக மாறியிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் அரசியலானது முன்னைய காலங்களை விடவும் அந்த மக்களுக்கு சாதகமான போக்கோடு முன்னோக்கி அசைந்துகொண்டிருக்கிறது. இனப்படுகொலைக்கு பின்னான ஈழ மக்களின் அரசியலை 2015 ஜனவரி 8க்கு முன் பின் என்று பார்க்கவேண்டியது அவசியமானது. ஆளும் அதிகாரத்தின் மாற்றங்கள் அடக்கப்படும் மக்களுக்கு எந்தவொரு வெளிச்சத்தையும் தந்துவிடப்போவதில்லை என்பது அனுபவத் தழும்புகளின் பாடம். 

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக வீழ்ச்சியடைந்ததை அடுத்து உலக வல்லரசுகளின் கண்ணோட்டத்தில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் தமக்கான மாபெரும் சவால் தீர்ந்து விட்டதாக எண்ணின. அதே நேரத்தில் இனப்படுகொலைக்கு உள்ளான மக்களின் அழுகைக்கும் சாவுகளுக்கும் ஒரு நீதியான தீர்வை வழங்க வேண்டிய இடத்திற்கு உலகம் தன்னை மாற்றியே ஆகவேண்டும் என்கிற நிலைக்கு வந்ததைப் போல ஒரு நிழலை அந்த மக்களிடமே உலவ விட்டிருந்தது. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மாபெரும் இனப்படுகொலையை உலகத்தின் வல்லரசான அமெரிக்கா தொட்டு தமிழீழத்தின் பிராந்திய வல்லரசான இந்தியா வரைக்கும் உதவிகள் வழங்கி வழங்கி ஊக்குவித்ததோடு அதிலிருந்து தமக்கான இலாப நட்டங்களை எல்லாம் தீர்த்துக்கொண்டு விட்டன. இந்து சமுத்திர பிராந்தியத்தின் கதாநாயக சக்தியாக முப்பதாண்டு காலம் நிலையாது நின்ற ஒரு விடுதலை இயக்கம் சரிவுற்றது மட்டுமல்லாமல் அந்த நிலத்தின் மக்களும் அரசியல் அநாதைகளாக ஒரு அரசியல் படுகளத்தில் நிற்கவேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.


எளிய மக்களின் கண்ணீரும் இரத்தமும் புதைக்காத சடலங்களும் நிறைந்த அந்த மண்ணில் இன்றைக்கு நிகழும் மிதவாத அரசியல் என்பது முழுக்க முழுக்க சுயலாபங்களை கதாநாயகதத்துவச் சாதனை வாதங்களை கொண்டு தான் நிகழ்த்தப்படுகிறது. புலிகள் இயக்கத்தின் இராணுவ வீழ்ச்சி தமிழ் மிதவாத அரசியல்வாதிகளுக்கும் மக்களோடு தொடர்பறுந்து கிடந்த தமிழ் மிதவாத அரசியலுக்கும் வெளியில் காட்ட முடியாத ஒரு மாபெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தன் தலைமை தாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் அவ்வாறான மகிழ்ச்சிகளை தமது மேடைப்பேச்சுக்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிர்ப்பதை காணமுடியும். புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னால் அரசியல் அநாதைகளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்மக்களின் கண்ணீரில் தமது அரசியலை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் குரலாக தன்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உலகின் முன் நிறுத்தியது. "அண்ணை எப்ப சாவான், திண்ணை எப்ப வெளியாகும்" என்கிற பழமொழியை நினைவுபடுத்தும் ஒரு திண்ணைப் போட்டியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை பார்த்துவிட்டது. 

ஒரு தேசிய இனம் இனப்படுகொலைக்கு உள்ளானதன் பின்னர் எவ்வாறு தன்னை கட்டமைத்துக்கொள்ளவேண்டும். புறத்தில் இருந்து ஏற்படுத்தப்படும் அரசியல் நகர்வுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்கிற துளியளவு பிரயத்தனம் இல்லாமல் தமது சுயலாபங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு இனத்தின் முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த மக்களுக்காக இனப்படுகொலைக்கு பின்னான ஆறுவருடங்களில் குறிப்பிடப்படும் படியான எந்தவொரு செயற்பாட்டையும் செய்யவில்லை என்பதை தமிழ் மக்களாகிய நாம் உணர்ந்து தான் இருக்கிறோம்.

மகிந்தவை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்தால் மைத்திரி தீர்வை வழங்கிவிடுவார் என தமிழ் மக்களின் முன்னே நல்லாட்சி அரசிற்கு அத்திவாரமிட்டு உழைத்த தமிழ் தேசியக் கூட்டமைபின் இந்த முடிவானது வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசின் திட்டத்திற்கு அமைவாக நிகழ்த்தப்பட்டுவிட்டது. மைத்திரியை வெல்ல வைப்பதன்  மூலம் 2016க்குள் ஒரு தீர்வை நாம் பெற்றுவிடுவோம் என சம்பந்தன் கூறியிருந்தது கேட்கும் போது மட்டுமல்லாமல் நினைக்கும் போதும் சிரிப்பு வருகிற கருத்து. மைத்திரியும் ரணிலும் தமிழர்களுக்கு தீர்வை வழங்குவார்கள் என நம்பிய சம்பந்தனை நம்பியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இதர உறுப்பினர்களை நினைத்து கண்ணீர் தானே விடமுடியும். ஆனால் அவர்கள் சம்பந்தனை மிஞ்சியவர்கள். “கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் கார்” என்று அமிர்தலிங்கத்திற்கு எதிராக ஒட்டப்பட்ட வாசகங்களை போல “கேட்டது தீர்வு கிடைத்தது பாராளுமன்ற எதிர்கட்சி” என்று வாசகங்கள் ஈழத்தில் வரவேண்டும். 

மைத்திரியை சிங்கள சிம்மாசனத்தில் ஏற்றுவதன் மூலம் இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு எந்தத் தீர்வை பெற்றுத் தரமுடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பியது? நமது இனம் விடுதலைக்காய் எத்தனை எத்தனையோ உயிரிழப்புக்களை சந்தித்து இன்று எல்லாவற்றையும் இலனது நிற்கும் சூழலில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழீழத்தை கைவிட்டு விட்டோம், அதனை இனியும் பேசுவதில் அர்த்தமில்லை என தனது உரையில் அறிவித்திருக்கிறார். சிறிதரன் கைவிட்டுவிடலாம் என்றவுடன் அதனைக் கைவிடுவதற்கு அதுவொரு பள்ளிக்கூட அதிபர் பதவியல்ல. தமிழீழத்தை பேசுவதில் அர்த்தமில்லை என்று சிறிதரன் பேசுவதில் நிறைய அபத்தங்கள் இருக்கிறது. சிறிதரன் இப்படியான ஒரு இடத்திற்கு வந்துவிடுவார் என எண்ணியதைப் போன்று அவர் வந்துவிட்டார். இனப்படுகொலைக்கு பின்னான காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகத்தை கிளிநொச்சி எனும் மண்ணின் அடையாளத்தை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்த சிறிதரன் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விடலாம் என கூறிய போது அவரின் முன்னால் லட்சோப லட்ச உயிர்களின் முகங்கள் நிழல்களாக அலைந்திருக்கும். இனிமேல் தமிழீழத்தை சிறிதரன் பேசுவதில் அர்த்தமில்லை. அவர் ஒரு மிதவாத அரசியலின் இன்னொரு குழப்பவாதி அல்லது பிழைப்புவாதி அவ்வளவு தான்.


தனது தேசத்தை கைவிட்டு விடலாம் என சொல்லுகிற ஒருவனால் அவனின் சொந்த தேசத்துக்கு மக்களுக்கு எதுவும் செய்துவிடமுடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட சனங்களின் துயரத்தை போக்குவதற்காக ஒரு பொழுதும் முனையவில்லை. மக்களுக்கு ஏற்படப்போகும் தீர்வுகளை குழப்புவதும் அதனை வைத்து தமக்கான ஆதாயங்களை தேடுவதிலும் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது அரசியலை நிகழ்த்துகிறார்கள். கல்லறைகளும் குருதியும் மேவிக் கிடந்த மண்ணின் அவசியம் அதன் விடுதலையைத் தவிர வேறொன்றாக இருக்க முடியாது. சம்பந்தன் சுமந்திரன் சிறிதரன் என்கிற சிறிலாங்காவின் தேசியவாதிகளால் கொல்லப்பட்ட சனங்களின் கண்ணீருக்கு அவர்களுடைய வாழ்வுக்கு நாட்டிந விடிவுக்கு ஒன்றும் செய்துவிடமுடியாது. 

Comments

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்