என் நிழல்கள்

உனதழகு சக்தி வாய்ந்தது 
குளிர்கொண்ட வெய்யிலை கொத்துகிறது 
எப்போதும் போல கண்சிமிட்டி சுழல்கிறது 
ஆதிக் குணத்தில் கற்பனை நுழைக்கிறது
தளும்பும் படிகளில்
கசியுமென் தீண்டல் அலைகளை
மதுவாய்,மலராய்,மழைகளாய்
பாவிக்கிறதோ உன் மனம்
நிரம்பிக்கிடக்கும் நறுமணத்தில்
நனைந்தபடி கடலிருக்க
நெத்தலிக் கருவாடாக்கும்
அடங்கா ஆசையில்
மணலெங்கும் என்னை வீசுகிறது
விரிதோகை இமை
பரவசம் வழியும் முகத்துடன்
ஒரு கோடித் திங்களை பரிசளிக்கும்
உன்னிடம் வந்து கொண்டிருக்கிறது
ஒரு துண்டுப் பருவம்
உன் திசைச் சுழிகளில்
அகவைகள் கழிகிறது
யோகமில்லாத சிறகுகளை
பறத்தலுக்காய் உபயோகித்த
என்னைக் கொன்றுவிடச் சொல்கிறது
அறை முழுதும் ஊர்ந்து திரியும்
உன் புலன்கள்
என் நிழல்கள்.


**********************
என்பாலெழும் செல்லச் சிந்தையெங்கும்
உன் வேர்விட்ட புவனம்
நெடுங்கடல் பிளந்து
நித்தமும் பழுக்கிறது
அங்கே கலந்தெழும் என்னிடத்தே
நுரை மூச்சு வீசுமடி
மின்னிய காற்றின் இதழ் சேரும்
திருவுருவத் தீக்குழியில்
கானல் அந்தம் மயங்குமடி
பாம்பென நெளிந்த பொழுதில்
வேம்பென பரந்து தோன்றி
பொழில் நனைந்த குறிகள் எங்கும்
குளிர்ப்பூக்கள் நெருங்கிப் பெருக்கும்
சிணுக்கம் கசியும் கன்னியின் கரைகளில்
மிதக்கத் தெரியா குருட்டுத் தோணி
விழி திறந்து விருந்துண்ணுமா
கலையும் கூடல் கூத்தில்
ஆடித் திளைத்து உலர்ந்து பிரிகிறேன்
கனவு அரசென்றால்
பாலையில் தான் அலறவேண்டும்.


நன்றி .தீராநதி 
2015 ஜனவரி 

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்