கானகி - சிறுகதை

கானகி என்னைப் பத்து மணிக்கெல்லாம் வவுனியா நீதிமன்றத்துக்கு வரச் சொன்னவள். இப்ப அரை மணித்தியாலம் பிந்திட்டுது. நேற்று இரவு பொலிஸ்காரியிட்ட நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் குடுத்து போனில கதைக்கும் போதே பிந்தாமல் வரச் சொன்னவள். நீதிமன்றத்தில விடுதலையான பிறகும் தேவையில்லாமல் நிற்க கூடாது. நான் இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவன், மன்னிச்சுக் கொள்ளும் கானகி. என்னோட தாமதம் உமக்குத் தெரியும் தானே. ஆனால் நான் இண்டைக்கும் கொஞ்சம் முந்தியே வந்து நின்றிருக்கலாம். நீர் என்னைக் கோபிக்க மாட்டீர், ஆனாலும் எனக்கே என் மேல கோபம் வருது. பிள்ளையள் யாரோடையாவது அம்மாக்களோட நில்லும். நான் வந்திடுவன். வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இப்ப தான் இறங்கிறன். இரண்டு நாளாய் பெய்த மழைத் தண்ணி தேங்கி நிற்குது. பொய்க்காலை வைச்சிட்டு தூக்கமுடியாமல் சேறு. கால் புதையுது. வாழ்வும் தான். கானகி நடந்து வந்து கொண்டிருக்கிறன். மழை துமிக்கத் தொடங்குது நீர் வெளியால நிண்டால் உள்ள போய் நில்லும் நனையவேண்டாம். நான் இரண்டு நிமிடத்தில் வந்திடுவன். ரோட்டில ஆர்மிக்காரர் மாதிரி நீதிமன்றத்தில எக்கச்சக்கமான சனம். மகிந்த தேர்தலில சர...