கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி
நேர்கண்டவர் -அகரமுதல்வன் நகரம் பட்டினி போட்ட உங்கள் கடந்தகாலத்தினை “ நடைவண்டி நாட்கள் ” எனும் புத்தகத்தின் மூலம் அறியமுடிந்தது . அதுமட்டும்மல்ல கிராமத்திலிருந்து வந்தவர்களை நகரம் பழிவாங்கிய காட்சியாக எனக்குப்பட்டது . வாழ்க்கையின் அலைக்கழிப்பில் இருந்து தத்துவங்கள் தோன்றுவதாக நம்புகிறீர்களா ? வாழ்க்கை என்பதே அனுபவங்களின் தொகுப்பு என்பதை நம்புகிறேன் . அனுபவம் என்றாலே நல்ல அனுபவம் , கெட்ட அனுபவம் என இருக்கும் . நாம் வைத்திருக்க கூடிய லட்சியங்களுக்கு எதிர்மாறாக சம்பவங்கள் நிகழ்ந்தால் அது கெட்டஅனுபவம் . ஆனால் நல்லஅனுபவங்களை நோக்கி நாம் நகர்வதற்கே கெட்டஅனுபவங்களே தேவையுமாக இருக்கிறது . வாழ்வின் தார்ப்பரியம் இது தான் என்பதை புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் . அப்போது அதனை புரிந்துகொண்டேயாகவேண்டும் . அது தத்துவத்தை தருகிறதா ? இல்லையா ? என்பது அவசியமற்றது . ஆனால் அனுபவங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவையாகவே இருக்கிறது . கிராமத்தில் இருந்து நகரம் நோக்கி வருகிற பொழுது எந்தப் பின்னணியும் இருக்கவில்லை . அதுமட்டுமல்ல தங்குவதற்கு இடமும் உண்பதற்கு உணவும் பேசுவதற...