எனது இரவும் உமது பகலும்

மீதியின் மீதியிலிருந்து சிதையும் பகலை இரவு ஒழிக்கிறது அதன் மேற்பரப்பில் ஒளிரும் நிலா பொய்யின் கனவுக்கு பாத்திரமானது துடிக்கும் சில நட்சத்திரங்கள் அதற்கே அந்நியமானது நீங்கள் இரவைப் போர்த்திக் கொள்கையில் தூங்கி விடுகிறீர்கள் அல்லது புணர்கிறீர்கள் எப்போதும் போல அற்பத்தின் கனவுகளை காண்கிறீர்கள் உங்களுக்கு தெரிந்திராத இரவுகள் என்னிடம் இருக்கிறது அதன் தோல் மெய்யின் கருவிலிருந்து மழித்த பகலின் உரோமங்கள் அதன் முகத்திலிருப்பது மலினமான ஒரு இருட்டு நான் மீதியின் மீதியிலிருந்து எப்போதும் ஒரு சூரியனை திறக்கிறேன் என் உதிரங்கள் சூரியக் கதிர்களாய் உம் கழல் படுகிறது அது உங்களுக்கு பகலாகவும் எனக்கு இரவாகவும் மீதியற்று அலைபோல அசையும் இந்தக் காலத்தின் நெஞ்சில் துவக்கின் சன்னங்கள் பாய்ந்திருக்கிறது. -அகரமுதல்வன் 28.12.2015