இரத்தத்தின் விழித்தெழல்
தப்புவித்த எங்களிடத்தில் புதியபாடலொன்று கம்பீரமாய் அமர்ந்திருப்பதை காயத்தின் தழும்புகளுக்குள்ளிருக்கும் சிவந்த தீவு அறியும் கொடுஞ் சேனைகளின் அஸ்தமனத்தை பிரவேசிக்காத சொந்தக்கூடாரங்களில் அந்திப்பலியாக்கி வேட்டையாட இருதயம் சிறகடிக்கிறது புரளும் வனவெள்ளம் சேதமாக்கப்பட்ட கல்லறைகளின் தொண்டையில் நீந்த விதைகள் நனைக்கும் வசந்தமறிகிறேன் மல்லாந்து கிடந்த மரணத்தில் சிதைந்த தம்முடலைத் தேடிக்களைத்த முகங்களில் மேல்காற்று மிதக்கிறது ஒடுக்கத்தில் பாம்பைப் போல நெளிந்து பிணங்களின் துர்நாற்றத்தில் கொதிக்கத்தொடங்கும் ஆழ்கடலில் களிப்புண்டாக்கும் விடியற்காலை மெல்ல அசைந்து நெஞ்சினை திறக்கிறது இனிமேலுமென்ன யுத்தத்தில் சூரியனைக் காண்போம். -அகரமுதல்வன் 27.11.2014